புதுடில்லி: நாட்டின் தனியார் எரிபொருள் விற்பனை நிறுவனங்களில் ஒன்றான ‘நயாரா எனர்ஜி’, பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 3 ரூபாயும் உயர்த்தியுள்ளது.
கடந்த பிப்., 28ல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களை தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே, கடந்த நான்கு வாரங்களாக தொடரும் மோதலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.
இது, இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரும் நிதி சுமையை ஏற்படுத்தி உள்ளது. இந்த சுமையை வாடிக்கையாளர்கள்மீது சுமத்தும் வகையில் நயாரா எனர்ஜி இந்த விலை உயர்வை அறிவித்துள்ளது.
மாநிலங்களுக்கு ஏற்ப மாற்றம்: இந்த விலை உயர்வு மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். ‘வாட்’ உள்ளிட்ட உள்ளூர் வரிகளை பொறுத்து, சில இடங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5.30 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
போர் காரணமாக நயாரா எனர்ஜி விலைகளை உயர்த்தி இருந்தாலும், ரிலையன்ஸ் மற்றும் பி.பி., நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான ஜியோ – பி.பி., ஷெல் ஆகிய தனியார் நிறுவனங்கள் இதுவரை விலையை உயர்த்தவில்லை.
