மேற்காசியப் பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, தெற்காசிய நாடுகள் உட்பட பல்வேறு உலக நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக, இந்தியாவிலும் எரிவாயு தட்டுப்பாடுநிலவி வருகிறது. இதனால், பல்வேறு நகரங்களில் உணவகங்கள் மற்றும் கடைகள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளது.
ஏற்கனவே வணிக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அதிர்ச்சி தரும் விதமாக இன்று சென்னையில் வணிக சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. ரூபாய் 243.50 ஆக இருந்த வணிக சிலிண்டரின் விலை ஒரே நாளில் 203 ரூபாய் அதிகரித்து 2246.50 என விலை உயர்ந்துள்ளது. அதேநேரம் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்கிறது.
எரிபொருள் சிலிண்டர் விலை அதிகரித்துள்ளதை தொடர்ந்து, மக்களுக்கு மற்றுமொறு அதிர்ச்சியை தரும் விதமாக நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை பிரபல ஷெல் நிறுவனம் உயர்த்தியுள்ளது. இஸ்ரேல் – ஈரான் – அமெரிக்கா இடையேயான போர் காரணமாக எரிபொருள் மட்டுமின்றி கச்சா எண்ணெய் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக சர்வதேச சந்தையில் கச்சா என்ணெய்யின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை போன்ற நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் இந்தியாவின் முன்னணி தனியார் ரீடைல் எரிபொருள் நிறுவனமான ஷெல் நிறுவனம், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியுள்ளது. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7, டீசல் விலை லிட்டருக்கு ரூ.25 அதிகரித்துள்ளது. பொதுவாகவே பொதுத்துறை நிறுவனங்களை விட தனியார் நிறுவனமான ஷெல் நிறுவனத்தில் விலை அதிகமாக உள்ள நிலையில் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே நயாரா நிறுவனம் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திருக்கும் நிலையில் மற்றொரு நிறுவனமான ஷெல் நிறுவனமும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தியிருப்பது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
