தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், திமுகவிடம் பல்வேறு இழுபறிக்கு பின்பு முதல் ஆளாக 28 தொகுதிகளை வாங்கிய காங்கிரஸ், வேட்பாளர் பட்டியலை வெளியிடாமலேயே காலம் தாழ்த்தி வந்தது. எந்த தொகுதிகள் என முடிவான பின்னும், அந்த தொகுதிகளில் யாரை வேட்பாளர்களை நிறுத்துவது என கட்சிக்குள்ளேயே குழப்பம் நீடித்து வந்தது.
இதனிடையே, கட்சிக்குள் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், விற்பனை அணுகுமுறையோடு வேட்பாளர் தேர்வு நடக்கிறது என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இது காங்கிரஸிற்குள் நடக்கும் குழப்பத்தை வெளிச்சம் போட்டு காட்டியது. இந்த சூழலில், வேட்பாளர்களை தேர்வு செய்ய காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, செல்வப்பெருந்தகை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பல்வேறு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டது.
வேட்புமனு செய்ய சனி (04-04-26), திங்கள் (06-04-26) ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள இந்த பரபரப்பான சூழலில், இன்று (03-04-26) முதற்கட்டமாக 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அதிலும் காங்கிரஸ் கட்சியில் மதுரை மேலூர் தொகுதியில் மாணிக்கம் தாக்கூர் எம்.பியின் ஆதரவாளருக்கு சீட்டு கொடுப்பதா? ப.சிதம்பரம் ஆதரவாளரான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீரன் அம்பலம் மகன் ரவிச்சந்திரனுக்கு சீட்டு கொடுப்பதா? என்ற பஞ்சாயத்தில் அந்த தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது.
காங்கிரஸ் அறிவித்த 27 வேட்பாளர்களில், சிங்காநல்லூர் தொகுதியில் ஸ்ரீநிதி நாயுடு, குளச்சல் தொகுதியில் தாரகை கத்பட் ஆகிய 2 பெண் வேட்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய நாட்டை பல வருடம் ஆட்சி கட்சியான காங்கிரஸ் சார்பில் போட்டியிட 2 பெண்களுக்கு மட்டுமெ வாய்ப்பு கொடுத்திருப்பது சர்ச்சையாகியுள்ளது. பா.ஜ.க சமூகநீதிக்கு எதிரானது என்றும் பெண்களுக்கு அதிகாரமளிக்க பா.ஜ.க மறுக்கிறது என்றும் காங்கிரஸால் தொடர்ந்து விமர்சனம் செய்யப்பட்டும் பா.ஜ.கவில் கூட சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட 5 பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் சமூகநீதிக்கு ஆதரவாகப் பேசுகிறோம் என பேசும் காங்கிரஸில் வெறும் 2 பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருப்பது விவாதப்பொருளாக மாறியுள்ளது.
