தமிழகத்தில் அண்மையில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி 2,77,38,925 ஆண்கள், 2,89,60,838 பெண்கள், 7,617 இதர வாக்காளர்கள் என மொத்தம் 5,67,07,380 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களைவிட பெண்கள் 12.22 லட்சம் பேர் அதிகம் உள்ளனர்.
முந்தைய காலங்களிலும்கூட பெரும்பாலும் இவ்வாறாக பெண் வாக்காளர்கள் அதிகம் கொண்டதாகவே வாக்காளர் பட்டியல் இருந்திருக்கிறது. இந்தியா முழுவதுமே பரவலாக இதே போக்குதான், விதிவிலக்காக வடகிழக்கு மாநிலங்கள் சிலவற்றில் மட்டும் ஆண் வாக்காளர்கள் அதிகமிருப்பதைக் காணலாம்.
இந்த புள்ளிவிவரமே சொல்லும் தேசிய, மாநிலக் கட்சிகள், வளரும், அரும்பும் அரசியல் கட்சிகள் என எல்லாவற்றுக்கும் பெண் வாக்காளர்களை ஈர்ப்பது எவ்வளவு முக்கியமென்பது.
பெண்களின் வாக்குகளை வசப்படுத்துவது என்பது அத்தனை எளிதல்ல. அதை அரசியல் களத்தில் லாவகமாக செயல்படுத்தி அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின் சாதித்ததையும், தேர்தல் களம் காணாமலேயே கணிசமான அளவில் பெண்கள் அபிமானத்தை சம்பாதித்து வைத்திருக்கும் விஜய் அரசியல் பற்றியும் இனி அலசுவோம்.
தேர்தல் அரசியலில் பெண் வாக்காளர்களின் முக்கியத்துவத்தையும், அவர்களை தக்கவைத்துக் கொள்ள எடுக்கப்பட்ட முயற்சிகளையும் அண்ணாவில் இருந்து ஆரம்பிப்பது தமிழக அரசியல் வரலாற்றைப் பொருத்தவரை ஆகப் பொருத்தமானது.
அண்ணா முதல்வராவதற்கு முன்னர் தேர்ந்த வாசிப்பாளராக, சிந்தை தெளிவுடன் மேடைகளில் பேசக் கூடியவராக, மொழி ஆளுமை மிக்கவராக இவற்றைக் கொண்டு சமூக நீதி அரசியலை முன்னெடுப்பவராக இருந்தார். அவருடைய எழுத்துகள் அன்றைய காலக்கட்டத்தில் நிலவிய பல்வேறு சமூகப் பிரச்சினைகளை பேசியதோடு அவற்றுக்கான தீர்வை முன்னிறுத்துவதாகவே அமைந்தன.
அப்படித்தான் அண்ணாவின் எழுத்துகளில் பெண்களின் முன்னேற்றம் வியாபித்துக் கிடந்தது. பாரதி கண்ட புதுமைப் பெண் போல் அண்ணாவும் தன் வழியில் பெண்கள் புரட்சிக்கு மிகப்பெரிய அடித்தளமிட்டிருக்கிறார். சமூக கட்டுப்பாடுகளை பெண்கள் உடைத்தெறிவது பற்றி அவர் தனது பல கட்டுரைகளிலும் எழுதியிருக்கிறார்.
குடும்பத்தில் மனைவியின் கடமைகள் அவளுக்கு சுமையாவது, மிகுந்த வயது வித்தியாசம் கொண்ட ஆணுக்கு பெண் பிள்ளைகளை திருமணம் செய்து கொடுப்பது, கைம்பெண்ணின் பாலியல் உணர்வும் சமூகம் அப்பெண்ணின் மீது விதித்துள்ள கட்டுப்பாடுகள் குறித்தும் அண்ணா தனது கட்டுரைகளில் ஆழமாகப் பேசியிருக்கிறார்.

அரசியல் தளத்தில் பெண்ணுரிமை பற்றிய விவாதங்களும், பெண்கள் முன்னேற்றம் சார்ந்த பார்வைகளும் விரியும் முன்னரே அண்ணா மறைந்துவிட்டார் என்றாலும் கூட, அந்தக் குறுகிய காலத்தில் அவர் , “பெண்களையும் உள்ளடக்கியது தான் திராவிட இயக்கத்தின் சமூக முன்னேற்றப் பார்வை” என்பதை வகுத்துக் கொடுத்துவிட்டுத்தான் மறைந்தார் எனலாம்.
திமுகவில் அன்னை சத்தியவாணி முத்துவைக் கொள்கை பரப்புச் செயலாளராக்கி அந்தக் காலத்திலேயே கட்சி அரசியலில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து முன்மாதிரியை ஏற்படுத்தியவர் தான் அண்ணா. 1967 முதல் 1969 வரை தமிழ்நாட்டில் அண்ணா ஆட்சியின்போது ஹரிஜன நலன் மற்றும் தகவல் துறை அமைச்சராகப் சத்தியவாணி முத்து பணியாற்றினார்.
அண்ணாவின் ஆட்சியில் தான் சுயமரியாதைத் திருமண முறைக்குச் சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டது. பெண்களின் உரிமைகளை அச்சட்டம் பெற்று தந்ததோடு அவர்களின் சுயமரியாதையையும் காப்பாற்றியது. விதவை மணம் புரிந்தோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை போன்ற பல்வேறு நடவடிக்கைகள் அவர் காலத்தில் முன்னெடுக்கப்பட்டன.

திமுக ஆட்சியைப் பிடித்தபோது அதன் பின்னணியில் அது முன்னெடுத்த சமூக, மொழிப் போராட்டங்கள்தான் முக்கியமானவையாக இருந்தன. இருந்தாலும், ஆட்சிக்கு வந்தபின்னர் கட்சியோடு, பெண்களின் முன்னேற்றமும் சேர்த்தே வளர்த்தெடுக்கப்பட்டது. அந்தப் பார்வைதான் இன்றுவரை திமுகவில் மகளிர் நலத் திட்டங்கள் வடிவில் வாவ் வியூகங்களாக சுழன்று கொண்டிருக்கிறது.
பெரியார், அண்ணா வழியில் வந்த கருணாநிதி, முன்னவர்கள் மேடையில் பெண்கள் நலன் சார்ந்து பேசியதையும், அவற்றையும் தாண்டி பெண்களின் வளர்ச்சிக்கு பல திட்டங்களையும் திராவிட இயக்கத்தின் சார்பில் கொண்டுவந்திருக்கிறார்.
பெண்களின் வாழ்வை மாற்றியமைத்த திட்டங்களில் சில வரலாற்றில் முத்திரை பதித்தவையாகும். பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை, வேலைவாய்ப்பில் 30% இட ஒதுக்கீடு, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவி திட்டம், முத்துலெட்சுமி ரெட்டி நினைவு மகேப்பேறு உதவி திட்டம் என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
மகளிர் காவல் நிலையங்களை உருவாக்க 1973-ம் ஆண்டு விதை போட்டவர் கருணாநிதி. அடுத்த ஆண்டு, பெண்கள் காவல் துறையில் இணைந்து பயிற்சி பெற்றனர். அவர்களின் முதல் அணிவகுப்பு எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. அதைத் தொடர்ந்து அதிமுக ஆட்சியில் 1992-ல் முதல் மகளிர் காவல் நிலையம் ஆயிரம் விளக்கு தொகுதியில் அமைக்கப்பட்டது.
1929 ஆண்டு செங்கல்பட்டில், தந்தை பெரியார் தலைமையில் நடந்த முதல் சுயமரியாதை மாநாட்டில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கொடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெரியாரின் கனவை 1989-ம் ஆண்டு நிறைவேற்றிக் காட்டினார் கருணாநிதி. ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சம உரிமை கொடுக்கும் சட்டம் அந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேறியது.
அப்போது பேசிய கருணாநிதி “எந்த ஒரு சமூக மறுமலர்ச்சியும், பெண்களின் முன்னேற்றம் இல்லாமல் ஏற்படாது” என்று கூறியது இங்கே நினைவுகூரத்தக்கது.
1989-ம் ஆண்டு, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மற்றும் நடுத்தர வர்க்க குடும்பங்களையும் சேர்ந்த பெண்களுக்கு ஆரம்பப் பள்ளி முதல் , பட்டப்படிப்பு வரை இலவச கல்வி வழங்கும் ஈ.வே.ரா. நாகம்மையார் கல்வித்திட்டத்தை கொண்டு வந்தார்.
அதனைத் தொடர்ந்து அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு என்பதாகும். ஏராளமான பெண்கள் இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் அரசுப் பணிகளில் சேர்ந்தனர். 1996-ம் ஆண்டு தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கொண்டுவந்தார் கருணாநிதி.

இந்தப் பட்டியலை கருணாநிதி ஆட்சிக் காலத்தின் கடைசி காலம் வரை நீட்டித்துக் கொண்டே செல்லலாம்.
மக்கள் இல்லங்களில் ‘கலைஞர்’
சமூகத்தில் பெண்களை உள்ளடக்கிய முன்னேற்றம்தான் திமுகவின் ஆரம்ப காலம் தொட்டு மகளிர் வாக்கு வங்கியை தக்கவைத்துக் கொள்ள பெரும் பலமாக இருந்துள்ளது.
2006-ல் திமுக வெளியிட்ட சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில், அனைவருக்கும் இலவச கேஸ் அடுப்பு அளிக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. அதே தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற இன்னொரு முக்கிய அறிவிப்பு இலவச வண்ணத் தொலைக்காட்சி திட்டம்.
கேஸ் அடுப்பு, இலவச வண்ணத் தொலைக்காட்சித் திட்டங்கள் தமிழகத்தில் பெண்களை வெகுவாகக் கவர்ந்தது. விறகுப் புகையில், மண்ணெண்ணெய் நெடியில் இருந்து பெண்கள் விடுபட்டனர். டிவி பார்க்க அதை வைத்தவர் வீட்டை நம்பியிருக்க வேண்டிய சூழலில் எல்லோர் வீட்டிலும் கலைஞர் வண்ணத் தொலைக்காட்சி ஓட ஆரம்பித்தது.
பெண்கள் உரிமை, பெண்கள் முன்னேற்றம், பெண்களின் தேவை என்றே திமுக தனது தேர்தல் வியூகங்களை வகுத்து வந்திருக்கிறது.
திமுக பெருந்தலைகள் ஆரம்ப காலத்தில் மகளிர் மேம்பாட்டில் கவனம் செலுத்தி, பின்னர் அதன் வாயிலாகவே மகளிர் வாக்குகளை தக்கவைத்தனர்.
அண்ணாவும் கருணாநிதியும் பெண்களின் முன்னேற்றத்துக்கு வித்திட்டு, அவர்களின் வாக்குகளையும் வசப்படுத்தி, தேர்தல் களம் என்னும் கிரிக்கெட்டில் ‘க்ளாஸ்’ ஓபனிங் பேட்டிங் செய்ய, அத்தகைய வியூகங்களின் அடுத்தகட்ட பாய்ச்சலைக் காட்டி 2021 களத்தில் வின்னிங் ஷாட் விளாசியது சமீபத்திய வரலாறு.
இந்த விஷயத்தில் திமுகவுக்கு சற்றும் சளைத்தது அல்ல அதிமுக. அதற்கு எம்ஜிஆரும் ஜெயலலிதாவுமே சான்று. அது குறித்து அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.!
