பெரம்பூரில் மார்ச் 28ம் தேதி பிரசாரம் தொடங்க விஜய் திட்டம்; அனுமதி கேட்டு அதிகாரிகளிடம் மனு

சென்னை:மார்ச் 28ம் தேதி பெரம்பூர் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்க தவெக தலைவர் நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளார். பிரசாரத்திற்கு அனுமதி கேட்டு தலைமை தேர்தல் அதிகாரியிடம் இதற்கான மனு அளிக்கப்பட்டுள்ளது.

2026 சட்டசபை தேர்தலுக்கு நடிகர் விஜய்யின் தவெக கட்சி புதிய வரவு. யாருடன் கூட்டணி இல்லை, தனித்தே போட்டி என்று அறிவித்து இருக்கிறது. 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்ந்து எடுத்துள்ள விஜய், அந்த பட்டியலை அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்க இருக்கிறார்.

இந் நிலையில் பெரம்பூர் தொகுதியில் தமது தேர்தல் பிரசாரத்தை விஜய் மார்ச் 28ல் தொடங்குகிறார். அதற்கான அனுமதி தருமாறு கேட்டு, தலைமை தேர்தல் அதிகாரியிடம் செங்கோட்டையன் மனு ஒன்றை அளித்துள்ளார். அதிகாரி தரப்பில் அனுமதி அளிக்கப்படும் பட்சத்தில் அவரின் பிரசாரம் சனிக்கிழமையான மார்ச் 28ல் தொடங்கி விடும்.

அங்கு பிரசாரத்தை விஜய் தொடங்கும் வகையில், பெரம்பூரில் குளிர்சாதன வசதியுடன் கூடிய தேர்தல் பணிமனை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பணிமனை மார்ச் 27ம் தேதி திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. தேர்தல் அதிகாரியிடம் இருந்து உரிய அனுமதி கிடைத்துவிட்டால் அதற்கு மறுநாளான மார்ச் 28ல் விஜய் தேர்தல் பிரசாரத்தை துவங்குவார்.

மொத்தம் 20 இடங்களில் விஜய் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார். நாள்தோறும் 5 முதல் 6 இடங்களில் வேட்பாளர்களை ஆதரித்து, அவர் பேசும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பெரம்பூரில் அவர் பிரசாரத்தை தொடங்கும் பட்சத்தில் அதே தொகுதியில் விஜய் போட்டியிடுகிறாரா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

Source link