சென்னை: சென்னை பெரம்பூர் தொகுதியில், த.வெ.க., தலைவர் விஜய் போட்டியிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை பெரம்பூர் தொகுதி த.வெ.க., செயல் வீரர்கள் கூட்டம், வியாசர்பாடியில் நேற்று நடந்தது. அதில், அக்கட்சியின் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:
பெரம்பூரில் ஏன் கூட்டம் என பலரும் கேட்கின்றனர். பிகில் படத்தில் வில்லன் இடத்துக்கு விஜய் சென்று, கார் கதவை திறக்கும்போதே ஐந்து பேர் பறப்பர். அதேபோல, துறைமுகம் தொகுதியில் த.வெ.க., நிர்வாகிகள் தாக்கப்பட்டபோதே, வடசென்னையில் களமிறங்க விஜய் முடிவெடுத்தார்.
கடந்த 1962 முதல் சென்னை தி.மு.க., கோட்டை என்கின்றனர். ஆனால், இனி சென்னை த.வெ.க., கோட்டை. வறுமை அதிகமுள்ள இடத்தில், மக்களுக்கான தேவை அதிகமாக இருக்கும்; அங்கு போட்டியிட வேண்டும் என விஜய் சொல்வார்.
கொளத்துார், ஆர்.கே.நகர் என, வடசென்னையில் ஒரு தொகுதியில் நிற்க வேண்டும் என்பது தான் விஜயின் விருப்பம். பெரம்பூர் தொகுதியில் விஜய் நிற்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன். இவ்வாறு பேசினார்.
தொடர்ந்து, த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த் பேசுகையில், ”ஆதவ் தீர்மானத்தை, எல்லாரும் மனதார ஏற்கிறோம். உங்கள் விருப்பத்தை விஜயிடம் சொல்வோம்,” என்றார்.
த.வெ.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: விஜய் போட்டியிடும் தொகுதி இன்னும் முடிவாகவில்லை. அந்த தொகுதியில் போட்டியிட, ஆதவ் அர்ஜுனா தான் விருப்ப மனு வழங்கி உள்ளார். அதனால் தான், பெரம்பூரில் கூட்டம் நடத்தி உள்ளார். விஜய் அங்கு போட்டியிடுவார் என சொன்னால், நிர்வாகிகள் சுறுசுறுப்பாக வேலை செய்வர். அதற்காகத்தான், பெரம்பூரில் விஜய் போட்டியிட தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். இவ்வாறு கூறினர்.
