பீகார் அரசியலில் பல தசாப்தங்களாக அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய நிதிஷ் குமார், இன்று (மார்ச் 5) தனது முதல்வர் பதவியைத் துறந்து, மாநில அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்கு (ராஜ்யசபா) நகர முடிவெடுத்திருக்கிறார்.
இது பீகாரில் ஒரு நீண்ட சகாப்தத்தின் முடிவாகப் பார்க்கப்பட்டாலும், மறுபுறம் இது பாஜகவின் முழுமையான அரசியல் நகர்வாக கருதப்படுகிறது. ஒரு காலத்தில் நிதிஷ் குமாரின் நிழலில் வளர்ந்த பாஜக, இன்று அவரையே பின்னுக்குத் தள்ளிகாவர் மூலமே ஆட்சியைப் பிடிக்கும் நிலைக்கு உயர்ந்தது எப்படி? ஓர் விரிவான அலசல்!

நம்பிக்கைப் புள்ளியாக நிதிஷ்
1990 முதல் 2005 வரை லாலு பிரசாத் யாதவின் ஆட்சியில் பீகார் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து காணப்பட்டது. கடத்தல், ரெளடியிசம் மற்றும் பகல் நேர கொள்ளைகள் அந்த மாநிலத்தில் சாதாரணமாக ஒரு விஷயமாக இருந்தன. அதனை மையப்படுத்தி தேர்தலை சந்தித்து, 2005-ல் நிதிஷ் குமார் ஆட்சிக்கு வந்ததும், விரைவு நீதிமன்றங்களை அமைத்து குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தந்தது உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைளை மேற்கொண்டார். மக்கள் அச்சமின்றி வீதிக்கு வரும் சூழலை உருவாக்கியதே அவர் மீது மக்கள் வைத்த முதல் நம்பிக்கைப் புள்ளியாக இருந்தது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள் சிலர்.
பெண்களை ‘வாக்கு வங்கியாக’ மாற்றிய புரட்சி
இந்திய அரசியலில் பெண்களை ஒரு தனி வாக்கு வங்கியாக மாற்றிய பெருமை நிதிஷையே சாரும். இதற்காக அவர் செய்த இரண்டு முக்கியமான விஷயங்கள்… ஒன்று மிதிவண்டி திட்டம். பள்ளி செல்லும் மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கினார். இது கிராமப்புற பெண்களின் கல்வி விகிதத்தை உயர்த்தியதோடு, நிதிஷ் குமாரை ஒவ்வொரு வீட்டிலும் அவர் அங்கமாக இருப்பதாக பிரதிபலித்தது.
மற்றொன்று மதுவிலக்கு, 2016-ல் அவர் கொண்டு வந்த மதுவிலக்கு சட்டம், குடும்ப வன்முறையைக் குறைத்தது. இது ஆண்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தினாலும், பெண்கள் மௌனமாக நிதிஷ் குமாருக்கு வாக்களிக்க முக்கிய காரணமாக அமைந்தது. அதுமட்டுமின்றி உள்கட்டமைப்பு மற்றும் மின்சார வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தார்.

உள்கட்டமைப்பு மற்றும் மின்சார வசதி
2005-க்கு முன்னால் பீகாரில் சாலைகளின் நிலமை படுமோசம். நிதிஷ் ஆட்சியில் குக்கிராமங்கள் எல்லாம் சாலைகளால் இணைக்கப்பட்டன. 2018-க்குள் பீகாரின் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் கொண்டு வரப்படும் என்ற வாக்குறுதியை அவர் நிறைவேற்றினார். நிதிஷின் இந்த செயல்பாடுகள், அவருக்கு தொடர் ஆதரவை பெற்று தந்தது.
‘மகா தலித்’ மக்களைத் தன் பக்கம் இழுத்த நிதிஷ்
பிறகு லாலுவிடம் இருந்த யாதவர் அல்லாத மற்ற பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் தலித் மக்களைத் தன் பக்கம் இழுக்க நிதிஷ் ஒரு புத்திசாலித்தனமான காயை நகர்த்தினார்.
தலித் பிரிவிலேயே மிகவும் பின்தங்கியவர்களை ‘மகா தலித்’ என்று வகைப்படுத்தி அவர்களுக்குத் தனிச் சலுகைகளை வழங்கினார். இது லாலுவின் முஸ்லீம் யாதவ் கூட்டணியை உடைத்தது.

‘சுத்தமான’ தலைவர்
நிதிஷ் குமார் ஊழல் புகார்களில் சிக்காத ஒரு ‘சுத்தமான’ தலைவராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். எதிர்க்கட்சிகளில் அவருக்கு நிகரான ஒரு ‘வளர்ச்சி முகமாக’ யாரும் இல்லாதது அவருக்குச் சாதகமாக அமைந்தது. லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் இப்போது வளர்ந்து வந்தாலும், 2010 மற்றும் 2015-களில் நிதிஷுக்கு மாற்றாக ஒரு சிறந்த ஆளுமையை மக்கள் அங்கு பார்க்கவில்லை. அதனால் தொடர்ந்து நிதிஷை மக்கள் முதல்வராக தேர்ந்தெடுத்துகொண்டே இருந்தனர்.
மேலும் முதல்வர் பதவிக்காக அவரும் அணி தாவல்களை சர்வ சாதாரணமாக செய்ய கூடியவர் என்பதாலும், தொடர்ந்து முதல்வர் பதவியிலே நீடித்தார்.
நிதிஷ் குமாரின் சரிவு
இப்படி பீகாரின் முடிசூடா மன்னனாக இருந்த நிதிஷின் செல்வாக்கு மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது. அதற்கு காரணம் அவர் கூட்டணியை அடிக்கடி மாற்றியதும், பாஜக ஒரு சக்தியாக அம்மாநிலத்தில் உருவெடுத்ததும் தான்.
பீகாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (JDU) மற்றும் பாஜக இடையிலான உறவு ஒரு ‘பெரிய அண்ணன் – தம்பி’ உறவாகத் தொடங்கியது. ஆனால் காலம் செல்லச் செல்ல, அந்தப் பாத்திரங்கள் தலைகீழாக மாறின.

மோடியால் விலகிய நிதிஷ்
2005-ல் நிதிஷ் குமார் முதல்முறையாக பாஜகவுடன் இனணந்து தான் தேர்தலை சந்தித்து ஆட்சியைப் பிடித்தார். அவர்தான் அப்போது கூட்டணியின் அசைக்க முடியாத முகமாக இருந்தார். 2010 தேர்தலில் கூட நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம் 115 இடங்களை வென்றது. பாஜக 91 இடங்களை பெற்றது. ‘நிதிஷ் குமார் தான் பீகார், பீகார் தான் நிதிஷ் குமார்’ என்ற பிம்பம் இருந்தது. பாஜக அவருக்கு ஒரு துணையாக மட்டுமே இருந்தது.
இதனைத்தொடர்ந்து 2014-ல் மோடி பிரதமராக முன்னிறுத்தப்பட்டதை எதிர்த்து நிதிஷ் கூட்டணியில் இருந்து வெளியேறினார். 2015 தேர்தலில் லாலுவுடன் கைகோர்த்த நிதிஷ் 71 இடங்களை வென்றார். ஆனால், நிதிஷ் இல்லாமல் தனித்துப் போட்டியிட்ட பாஜக, இடங்கள் குறைவாகப் பெற்றாலும் (53 இடங்கள்), வாக்கு சதவிகிதத்தை அதிகரித்து பீகாரில் பாஜகவின் தனிப்பட்ட பலம் வளர்ந்திருப்பதை உறுதி செய்தது.
பதவிகளை தன் வசப்படுத்திய பாஜக
தொடர்ந்து 2017-ல் நிதிஷ் மீண்டும் பாஜகவுடன் இணைந்தாலும், 2020 தேர்தல் முடிவுகள் நிதிஷிற்கு பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. அந்தத் தேர்தலில் பாஜக 74 இடங்களை வென்றது. ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்கள் மட்டுமே வென்று நிதிஷின் பலத்தை பாதியாக குறைத்தது. பாஜக நினைத்திருந்தால் அப்போதே முதல்வரை மாற்றியிருக்கலாம்.
ஆனால், நிதிஷுக்கு கொடுத்த வாக்கிற்காக அவரை முதல்வராக்கியது. ஆனாலும், இரண்டு துணை முதல்வர்கள் பதவி மற்றும் நிதி, கல்வி, சுகாதாரம் போன்ற முக்கிய துறைகளை பாஜக தன்வசப்படுத்தியது. அதிகாரம் நிதிஷிடமிருந்து பாஜகவுக்கு அதிகாரப்பூர்வமாக நகரத் தொடங்கியது இங்குதான்.

ரிமோட் கண்ட்ரோலில் நிதிஷ் குமார்
இது நிதிஷ் குமாரின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தவும், பாஜகவின் பிடியை அமைச்சரவையில் அதிகரிக்கவும் செய்யப்பட்ட முதல் நடவடிக்கை. அதேபோல சட்சபையின் சபாநாயகர் பதவியை பாஜக தன் வசம் வைத்துகொண்டது. இது சட்டசபைக்குள் நடக்கும் விவாதங்கள் மற்றும் முடிவுகளில் பாஜகவின் ஆதிக்கத்தை வலுப்படுத்தி நிதிஷ் குமாருக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்தது.
அரசாங்கத்தில் நிதிஷ் குமார் முதல்வராக இருந்தாலும், பாஜக தனது ‘மண்டல்’ மற்றும் ‘சக்தி கேந்திரா’ அமைப்புகள் மூலம் பீகாரின் கிராமப்புறங்களில் கட்சியைத் தனித்து வளர்க்கத் தொடங்கியது. சுருக்கமாகச் சொன்னால் 2020-க்குப் பிறகு நிதிஷ் குமார் பெயரளவு முதல்வராக மட்டுமே இருந்தார். அரசாங்கத்தின் இயந்திரத்தை இயக்குகிற ‘ரிமோட் கண்ட்ரோல்’ பாஜகவின் கைகளுக்குச் சென்றது.
திட்டங்கள் மூலம் மக்களை ஈர்த்த பாஜக
நிதிஷ் குமாரின் ‘மகா தலித்’ மற்றும் ‘EBC’ (பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர்) வாக்கு வங்கிகளைத் தன்பக்கம் இழுக்கப் பல்வேறு சமூக நலத் திட்டங்களை மத்திய அரசு மூலம் நேரடியாக மக்களிடம் கொண்டு சென்றது. மத்திய அரசின் நேரடிப் பணப்பரிமாற்றம், இலவச அரிசி, உஜ்வாலா கேஸ் போன்ற திட்டங்கள் பெண்களிடையே பாஜகவிற்குப் பெரும் ஆதரவைத் தேடித்தந்தன. மேலும் மதுவிலக்கு சட்டம் போன்ற நிதிஷின் சில முக்கிய முடிவுகளில் பாஜக அமைச்சர்கள் பகிரங்கமாகவே விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கினர்.

பீகார் அரியணையில் பாஜக
இது நிதிஷ் குமாருக்குத் தன் சொந்த அரசாங்கத்தின் மீதே முழு அதிகாரம் இல்லை என்கிற பிம்பத்தை மக்கள் மத்தியில் உருவாக்கியது. இதன் முடிவு கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலித்தது. அந்தத் தேர்தலில் பாஜக 89 இடங்களை வென்று கூட்டணியில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களை பெற்று இடத்தை பெற்றது.
2005-ல் நிதிஷ் குமாரின் தோள்களில் ஏறி பீகாரில் கால்பதித்த பாஜக, இன்று அதே நிதிஷ் குமார் வியந்து பார்க்கும் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்து பீகார் அரியணையில் அமர இருக்கிறது.
நிதிஷ் குமார் முதல்வர் பதவியில் விலகியதைத் தொடர்ந்து, பீகாரில் முதல் முறையாக பாஜகவைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராகும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது. பாஜக கைப்பற்றும் மாநிலங்களில் இன்று பீகாரும் இணைந்திருக்கிறது.!
