ஷேன்யில் டியோ இயக்கத்தில் அதிவி சேஷ், மிருணாள் தாக்கூர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டகோயிட்’. சுப்ரியா யர்லகடா தயாரித்துள்ள இப்படத்திற்கு பீம்ஸ் சிசிரோலியோ இசையமைத்துள்ளார். தெலுங்கு மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்ட இப்படம் பான் இந்தியா படமாக பல்வேறு மொழிகளில் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகிறது. இதனையொட்டி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய மிருணாள் தாக்கூர் படம் மட்டுமல்லாது தான் தேர்ந்தெடுக்கும் முறை குறித்தும் பேசியிருந்தார்.
அவர் பேசியதாவது, “பெரிய இயக்குநர்கள் என்னை அணுகும் போது அவர்கள் சொல்லும் கதை எனக்கு ஆர்வத்தை தூண்டுகிறது. அதற்கான சம்பளமும் பெரியதாக இருக்கிறது. ஆனால் மிகுந்த வருத்தத்துடன் அதை வேண்டாம் என சொல்ல வேண்டியிருக்கிறது. ஏனென்றால் சீதா ராமத்தில் நடித்த சீதாவோ, ஹாய் நானா படத்தில் நடித்த யஷ்னாவோ ரசிகர்களிடம் ஏற்படுத்திய தாக்கத்திற்கு நான் ஈடு கொடுக்க வேண்டும். அதனால் சில நேரங்களில் பெரிய வாய்ப்பு வந்தாலும் சரியான படத்திற்கு காத்திருப்பதாக சொல்லி அதை மரியதையுடன் நிராகரித்து வருகிறேன்” என்றார்.
மிருணாள் தாக்கூர் தற்போது இந்தியில் இரண்டு படம் கைவசம் வைத்துள்ளார். இதைத் தவிர்த்து அட்லீ – அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகும் படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் இவரது பேச்சு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
