“பெரிய ஹீரோன்னா தனியா நிற்கணும்டா…” – விஜய்யை தாக்கிய சீமான்!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், விஜய்யின் தவெக, 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. இதில் குறிப்பாக அக்கட்சியின் தலைவர் விஜய், பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். தோல்வி பயத்தின் காரணமாக தான் அவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார் என மற்ற கட்சியினர் அவரை விமர்சித்து வருகின்றனர்.

அந்த வகையில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் அவர் இன்று (01-04-26) கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், “கூட்டத்தில் நிற்க துணிவும் வீரமும் தேவையில்லை. தனியாக நிற்க தான் வீரமும் துணிவும் தேவை, எனக்கு நேர்மை இருக்கிறது, உள்ளத்தில் தூய்மை இருக்கிறது, துணிந்து நிற்கிறேன். 100 விழுக்காடு மண்ணையும் மக்களையும் காதலிக்கிறேன், நம்புகிறேன். தன்னையும் நம்பாமல் மக்களையும் நம்பாதவன் தான் இரண்டு தொகுதியில் போட்டியிடுவான். ஆனால், நான் மாஸ், பிளாஸ்ட், நான் உச்சம் என வசனம் பேசுகிறார். பெரிய ஹீரோன்னா தனியா நிற்கணும். ஒரே தொகுதியில் நிற்க நம்பிக்கை இருக்கணும். நம்பிக்கையோடு இருங்க, நாம் வெல்லுவோம் என சொல்கிறார். உனக்கே நம்பிக்கை இல்ல.. எதுக்கு இரண்டு தொகுதியில் நிற்கிறே? இரண்டு முறை தேர்தலில் நின்று தோற்றுவிட்டேன். ஆனாலும் கூட மூனாவது முறை காரைக்குடியில் தனியாக நிற்கிறேன்.

ஒரு பதவியில் இருக்கும் போது இன்னொரு பதவியில் போட்டி போடுவது ஜனநாயக துரோகம், மக்கள் விரோதம். ஒருத்தன் ஒரே நேரத்தில் இரண்டு தொகுதியில் போட்டி போடுவது மக்கள் விரோதம். இது தான் எங்கள் கொள்கை நிலைப்பாடு. நாங்கள் தோற்றோம், வரலாற்றில் எந்த அளவுக்கு எவனும் தோற்க முடியாத அளவுக்கு தோற்றோம். என்னை தோற்கடித்தவன் என் தாய் தந்தையர் தான். அது எனக்கு பெருமையாக தான் இருக்கிறது. இன்னைக்கு வீழ்த்துவான், அடிப்பான், திட்டுவான். ஒரு நாள் உச்சி முகந்து இந்த பிள்ளைகளை கொண்டாடுகிற காலமும் வரும். ஆக சிறந்த கருத்தை முன்னிறுத்தி அரசியல் செய்கிறோம், கோடிகளை கொட்டி அல்ல” என்று காட்டமாகப் பேசினார். 

Source link