உத்தரப் பிரதேசத்தில் ஐந்து மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த தனது மகளின் சடலத்துடன் தந்தை அதே வீட்டிலேயே வசித்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் மீரட்டைச் சேர்ந்த பானு பிஸ்வாஸ் (76) என்பவரின் மகள் பிரியங்கா பிஸ்வாஸ். பிரியங்கா ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.
கடந்த 2023-ல் பிரியங்காவின் தாய் ஷர்மிஷ்டா பிஸ்வாஸ் தற்கொலை செய்துகொண்டார். அந்தத் துயரத்திலிருந்து மீள முடியாமல் தந்தை-மகள் இருவருமே வெளி உலகத் தொடர்பின்றி தனிமையில் வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பானு பிஸ்வாஸின் வீட்டிற்கு வந்த உறவினர்களுக்கு வீட்டின் உள்ளே நுழையும்போதே கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது.
சந்தேகமடைந்த அவர்கள் வீட்டைச் சோதனையிட்டபோது, ஒரு அறையில் பிரியங்கா எலும்புக்கூடாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.
சடலத்திலிருந்து வரும் துர்நாற்றம் வெளியே தெரியாமல் இருக்க, பானு பிஸ்வாஸ் தினமும் சடலத்தின் மீது பெர்ஃபியூம் தெளித்து வந்துள்ளார். இதன் மூலம் கடந்த ஐந்து மாதங்களாக எவருக்கும் சந்தேகம் வராமல் அவர் தடுத்துள்ளார்.
மகளின் இழப்பை ஏற்க முடியாமல் பானு பிஸ்வாஸ் இந்தச் செயலில் ஈடுபட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
பானு பிஸ்வாஸை போலீசார் கைது செய்து, அவரது மனநிலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரியங்கா உடல்நலக் குறைவால் இறந்தாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்பது பிரேதப் பரிசோதனை முடிவிலேயே தெரியவரும்.
