ஹைதராபாத்:பெற்றோரை புறக்கணிக்கும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தில், 15 சதவீதம் பிடித்தம் செய்து, அந்த தொகையை அவர்களது பெற்றோருக்கே வழங்க வழிசெய்யும் மசோதா, தெலுங்கானா சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. இங்கு, ‘தெலுங்கானா ஊழியர்களின் பொறுப்புடைமை மற்றும் பெற்றோர் ஆதரவு கண்காணிப்பு மசோதா – 2026’ஐ, மாநில ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலன் மற்றும் முதியோர் நலத்துறை அமைச்சர் அட்லுாரி லட்சுமண் குமார் சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார்.
மேல் முறையீடு
இந்த சட்ட மசோதாவில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து அவர் கூறியதாவது:
பெற்றோரை பிள்ளைகள் புறக்கணிப்பது, தெலுங்கானாவில் தொடர்கதையாக உள்ளது. இந்த சூழலில் பெற்றோரை ஆதரிக்க புதிய சட்ட மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனங்களில், பெற்றோரை புறக்கணிப்பவர்கள் குறித்து விசாரிக்க நியமன அதிகாரி அமைப்பு ஒன்றை மாநில அரசு அமைக்கும்.
இங்கு, பெற்றோர் புறக்கணிப்பு குறித்த மனுவை அளிக்கலாம். சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் இதற்கான அதிகாரியாக நியமிக்கப்படுவார்.
இந்த விவகாரத்தில், மேல்முறையீட்டு அதிகார அமைப்பாக செயல்பட முதியோர் நல ஆணையம் ஒன்றை அரசு அமைக்கும். இந்த சட்டத்தின் விதிகள் முறையாக செயல்படுத்தப் படுவதை கண்காணிக்க மாநில அளவிலான கண்காணிப்பு அமைப்பும் உருவாக்கப்படும்.
பிள்ளைகளால் புறக்கணிக்கப்படும் பெற்றோர், சம்பந்தப்பட்டவரின் மாதச் சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியை தங்களுக்கு ஒதுக்கக் கோரி, நிறுவனங்களில் நியமிக்கப்பட்ட அதிகாரியிடம் எழுத்துப்பூர்வமாக விண்ணப்பிக்கலாம்.
தங்கள் வாழ்வாதாரத்தை தொடர, போதுமான வருமானம் இல்லை என்பதையும், வாரிசுகளிடம் இருந்தும் தங்களுக்கு நிதியுதவி தேவை என்பதையும் அவர்கள் நிரூபிக்க வேண்டும்.
இதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரி விண்ணப்பங்களை ஆய்வு செய்து, 60 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும். இல்லையென்றால், முதியோர் நல ஆணையத்திடம் பெற்றோர் மேல்முறையீடு செய்யலாம்.
ரூ.10,000
அந்த மனு மீது, 60 நாட்களுக்குள் ஆணையம் முடிவெடுக்க வேண்டும். பெற்றோர் புறக்கணிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால், ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 10,000 ரூபாய் அல்லது 15 சதவீதம் பிடிக்கப்பட்டு, அவர்களுக்கு மாதந்தோறும் நேரடியாக வழங்கப்படும்.
விசாரணையின் போது, எந்த நிலையிலும் தங்கள் விண்ணப்பத்தையோ, மேல்முறையீட்டு மனுவையோ பெற்றோர் திருப்பிப் பெறலாம்.
சம்பளப் பங்கீடு குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யுமாறும் கோரலாம். உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர் கூட, முதியோர் நல ஆணைய அதிகாரியிடம் இதற்கான அனுமதியை அவர்கள் கோரலாம்.
பெற்றோரில் ஒருவர் உயிரிழக்கும் பட்சத்தில், உயிருடன் இருக்கும் மற்றொருவர் தனக்கான தொகையை வங்கி கணக்கிற்கு மாற்றக்கோரி விண்ணப்பிக்கலாம்.
இருவரும் உயிரிழக்கும் நிலையில், அவர்களின் மறைவை காரணம் காட்டி, பங்களிப்பு பிடித்தம் செய்வதை ரத்து செய்ய முதியோர் நல ஆணையத்திடம் ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம்.
அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் மட்டுமின்றி, எம்.எல்.ஏ., – எம்.எல்.சி., மாநகராட்சி உறுப்பினர்கள், நகராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் இந்த சட்டம் பொருந்தும். இந்த மசோதா விரைவில் சட்டமாக இயற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
