சென்னை: பேக்கேஜிங் மெட்டீரியல் விலை உயர்வால் ஐஸ் கிரீம் தயாரிப்பு தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறு மற்றும் நடுத்தர தொழில் ஐஸ்கிரீம் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஐஸ் கிரீம் தயாரிப்பு தொழில் ஆலோ சகர் குமரேசனார் கூறியதாவது:
வேகமாக வளர்ந்து வரும் தொழிலாக ஐஸ் கிரீம் தயாரிப்பு இருந்து வருகிறது. கடந்த 2023ல் 30,000 கோடி ரூபாயாக இருந்த இந்திய ஐஸ்கிரீம் சந்தை 2028ல் 50,000 கோடி ரூபாயாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதில், 23 சதவீதம் தென்மாநில ஐஸ்கிரீம் நிறுவனங்கள் பங்களிக்கின்றன.
பெரிய பிராண்டடு ஐஸ் கிரீம் தயாரிப்பு நிறுவனங் களோடு சிறு, நடுத்தர தொழில் ஐஸ்கிரீம் தயாரிப்பாளர்களும் பங்களித்து வருகின்றனர். தென் மாநிலங்களில் இத்தகைய நிறுவனங்கள் 200 உள்ளன.
இவை சிறிய அளவில் இயந்திரங்கள் அடங்கிய யூனிட் அமைத்து ஐஸ் கிரீம் தயாரித்து விற்பனை செய்து வருகின்றன.
ஐஸ்கிரீமை 50 கிராம், 100 கிராம் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் கப்களில் சேகரித்து விற்பனைக்கு அனுப்புகின்றனர்.
எரிவாயு தட்டுப்பாட்டால் 3 ரூபாய்க்கு விற்பனையான பிளாஸ்டிக் கப் 7 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. பல இடங்களில் பிளாஸ்டிக் கப் கிடைக்காத சூழல் நிலவுகிறது. குறைந்த விலைக்கு ஐஸ்கிரீமை விற்பனை செய்யும் தயாரிப்பாளர்கள் அதிக விலை கொடுத்து கப் வாங்க முடியாது.
சிறு தயாரிப்பாளர்களுக்கு பேக்கிங் கப்புகள் மிகவும் அவசியம். ஐஸ் கிரீம் விற்பனைக்கான முக்கியமான சீசன் வெயில் காலம் தான். இதேபோல் கோன்கள் கிடைப்பதும் சிரமமாக உள்ளது. கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்துஉள்ளார்.
இந்திய ஐஸ்கிரீம் சந்தை 2023ல் ரூ. 30,000 கோடி 2028ல் ரூ. 50,000 கோடி (கணிப்பு) தென்மாநில நிறுவனங்களின் பங்கு 23%
