மாட்ரிட்: ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிளப் கால்பந்து காலிறுதிக்கான முதல் போட்டியில் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்), பேயர்ன் முனிக் (ஜெர்மனி) அணிகள் மோதின. இதில் பேயர்ன் முனிக் அணி 2-1 என வெற்றி பெற்றது. பேயர்ன் முனிக் சார்பில் ஹாரி கேன், லுாயிஸ் டயஸ் தலா ஒரு கோல் அடித்தனர். ரியல் மாட்ரிட் அணிக்கு எம்பாப்வே ஆறுதல் தந்தார். லிஸ்பானில் நடந்த போட்டியில் ஆர்சனல் அணி (இங்கிலாந்து) 1-0 என, ஸ்போர்டிங் லிஸ்பான் அணியை (போர்ச்சுகல்) வென்றது.
ரஷ்ய வீரர் அதிர்ச்சி
மான்டி கார்லோ: மொனாகோவில், மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு 2வது சுற்று போட்டியில் ரஷ்யாவின் டேனில் மெத்வெடேவ், இத்தாலியின் பெர்ரெட்டினி மோதினர். இதில் மெத்வெடேவ் 0-6, 0-6 என அதிர்ச்சி தோல்வியடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த மெத்வெடேவ், தனது ‘ராக்கெட்டை’ மைதானத்தில் பல முறை அடித்து உடைத்தார்.
எக்ஸ்டிராஸ்
* ஸ்பெயினின் கிரனடாவில், உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் (‘ரைபிள்”https://www.dinamalar.com/”பிஸ்டல்’) தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான 10 மீ., ‘ஏர் பிஸ்டல்’ பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் முகேஷ் (579.21 புள்ளி), உஜ்ஜாவல் மாலிக் (577.17), பிரமோத் (574.16) முறையே 14, 22, 39வது இடம் பிடித்து ஏமாற்றினர்.
* ஷிம்லாவில், ஆசிய யூத் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்களுக்கான (19 வயது) போட்டியில் இந்திய அணி 3-0 என, இலங்கையை வீழ்த்தியது. இந்தியா சார்பில் ஜெனிபர், அனன்யா, பிரிஷா கோயல் வெற்றி பெற்றனர். ஆண்களுக்கான (15 வயது) போட்டியில் இந்திய அணி 3-0 என மாலத்தீவை வென்றது. இந்தியாவின் ஆதித்யா தாஸ், அக்சய், ஆகாஷ் வெற்றி பெற்றனர்.
* அந்தமான், நிக்கோபார் தீவில், ‘லிட்டில் அந்தமான் புரோ’ பனிச்சறுக்கு போட்டி இன்று துவங்குகிறது. நான்கு நாட்கள் நடக்கும் இப்போட்டியில் இந்தியாவின் கிஷோர் குமார், சிவராஜ் பாபு, கமலி பிரகாஷ், சுகர் சாந்தி, சிருஷ்டி செல்வம் பங்கேற்கின்றனர்.
* மும்பையில், ஏப். 10-12ல் இன்டர்-கிளப் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் 32வது சீசன் நடக்கவுள்ளது. இதில் பாம்பே ஜிம்கானா, சேம்பர் ஜிம்கானா உள்ளிட்ட 26 அணிகள் பங்கேற்கின்றன.
* விசாகப்பட்டனத்தில் நடக்கும் ஆந்திரா ஓபன் கோல்ப் சாம்பியன்ஷிப் தொடரின் 2வது சுற்றின் முடிவில் பெங்களூருவின் காலின் ஜோஷி 33, முதலிடத்துக்கு முன்னேறினார். ஹரியானாவின் துருவ் ஷியோரன் 31, இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
