பைனலில் பெங்களூரு-டில்லி * வெளியேறியது குஜராத் அணி

வதோதரா: பெண்கள் பிரிமியர் லீக் பைனலுக்கு, தொடர்ந்து நான்காவது முறையாக முன்னேறியது டில்லி அணி. நேற்று நடந்த ‘எலிமினேட்டர்’ போட்டியில் 7 விக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது.

இந்தியாவில், பெண்கள் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 4வது சீசன் நடக்கிறது. லீக் சுற்றில் 8ல் 6 வெற்றி பெற்ற பெங்களூரு அணி, பட்டியலில் முதலிடம் பெற்று, நேரடியாக பைனலுக்கு முன்னேறியது. நேற்று வதோதராவில் நடந்த ‘எலிமினேட்டர்’ போட்டியில் புள்ளிப்பட்டியலில் 2, 3வது இடம் பிடித்த குஜராத், டில்லி அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற டில்லி அணி கேப்டன் ஜெமிமா ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

குஜராத் அணிக்கு பெத் மூனே, சோபி டெவைன் (6) ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. அனுஷ்கா (16), நந்தனி பந்தில் அவுட்டானார். தொடர்ந்து அசத்திய நந்தனி, அடுத்து வந்த கேப்டன் ஆஷ்லே கார்டுனரை, ஒரே பந்தில் ‘டக்’ அவுட்டாக்கி அனுப்பி வைத்தார். மின்னு மானியிடம், கனிகா (6) சிக்கினார்.

ஜார்ஜியா 25 பந்தில் 35 ரன் எடுத்து உதவினார். மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய மூனே, 47 பந்தில் அரைசதம் கடந்தார். கடைசி நேரத்தில் இவரது விளாசல் கைகொடுக்க, குஜராத் 150 ரன்களை கடந்தது. காஷ்வீ 18 ரன் எடுத்தார். குஜராத் அணி 20 ஓவரில் 168/7 ரன் எடுத்தது. மூனே (62 ரன்) அவுட்டாகாமல் இருந்தார்.

அடுத்து களமிறங்கிய டில்லி அணிக்கு ஷைபாலி (31), லிஜெல்லி லீ (43) ஜோடி சூப்பர் துவக்கம் தந்தது. 7.1 ஓவரில் 89/0 ரன் குவிக்க, வெற்றி எளிதானது. ஜெமிமா 41 ரன் எடுத்தார். டில்லி அணி 15.4 ஓவரில் 169/3 ரன் எடுத்து, வெற்றி பெற்றது. நாளை நடக்கும் பைனலில், பெங்களூரு, டில்லி அணிகள் மோத உள்ளன.

Source link