பாங்காக்: பெண்களுக்கான ‘ரைசிங் ஸ்டார்ஸ்’ ஆசிய கோப்பை பைனலுக்கு இந்தியா ‘ஏ’ அணி முன்னேறியது. அரையிறுதியில், 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை ‘ஏ’ அணியை வீழ்த்தியது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், வளர்ந்து வரும் பெண்களுக்கான ‘ரைசிங் ஸ்டார்ஸ்’ ஆசிய கோப்பை கிரிக்கெட் 2வது சீசன் நடக்கிறது. முதல் அரையிறுதியில் ‘நடப்பு சாம்பியன்’ இந்தியா ‘ஏ’, இலங்கை ‘ஏ’ அணிகள் மோதின.
‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த இலங்கை ‘ஏ’ அணிக்கு சஞ்சனா (31) நல்ல துவக்கம் தந்தார். ஹன்சிமா (14), அனுஷ்கா (5), சத்யா சந்தீபனி (15) நிலைக்கவில்லை. ஷாஷினி (22) ஆறுதல் தந்தார். கேப்டன் ராதா யாதவ் ‘சுழலில்’ அமா காஞ்சனா (7), ஷயானி (3), லிஹினி அப்சரா (1), யசந்தி (0) சிக்கினர்.
இலங்கை ‘ஏ’ அணி 19.4 ஓவரில், 118 ரன்னுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. சச்சினி நிசான்சலா (6) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா ‘ஏ’ சார்பில் ராதா யாதவ் 4, தனுஜா, பிரேமா ரவாத் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.
ராதா அபாரம்: சுலப இலக்கை விரட்டிய இந்தியா ‘ஏ’ அணிக்கு நந்தினி (13) சுமாரான துவக்கம் தந்தார். அபாரமாக ஆடிய விரிந்தா 20 பந்தில், 42 ரன் (8×4) விளாசினார். அனுஷ்கா சர்மா (23) ஓரளவு கைகொடுத்தார். மின்னு மணி (2) ஏமாற்றினார். யசந்தி நிமந்திகா பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய கேப்டன் ராதா யாதவ் (31 ரன், 18 பந்து, 7×4), வெற்றியை உறுதி செய்தார்.
இந்தியா ‘ஏ’ அணி 13.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 119 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ‘ஆல்-ரவுண்டராக’ அசத்திய ராதா யாதவ், ஆட்ட நாயகி விருது வென்றார்.
மீண்டும் வங்கதேசம்
மற்றொரு அரையிறுதியில் வங்கதேச ‘ஏ’ அணி (110/8), 54 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் ‘ஏ’ அணியை (56/10) வீழ்த்தியது. நாளை நடக்கவுள்ள பைனலில், இந்தியா ‘ஏ’, வங்கதேச ‘ஏ’ அணிகள் மீண்டும் மோதுகின்றன. கடந்த முறை (2023) இவ்விரு அணிகள் மோதிய பைனலில் இந்தியா ‘ஏ’ அணி வெற்றி பெற்று முதன்முறையாக கோப்பை வென்றது.
