சமீபத்தில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில், 2 அரை சதங்களை அடித்து, தொடர் நாயகன் விருதினை வென்ற வைபவ் சூர்யவன்ஷிக்கு, துலீப் டிராபியில் துணைக் கேப்டன் பதவியை பிசிசிஐ கொடுத்துள்ளது.
துலீப் டிராபி தொடரின் ஈஸ்ட் ஜோன் அணியை இஷான் கிஷன் வழிநடத்த உள்ள நிலையில், துணைக் கேப்டன் பதவியை வைபவ் சூர்யவன்ஷிக்கு கொடுத்துள்ளனர். பிசிசிஐ கேட்டுக் கொண்டதால்தான், சூர்யவன்ஷிக்கு துணைக் கேப்டன் பதவியை கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
ஈஸ்ட் ஜோன் அணியில், முகமது ஷமி, முகேஷ் குமார், அபிமன்யு ஈஸ்வரன், ஷாபஸ் அகமது போன்றவர்களும் இடம்பெற்றுள்ளனர். இப்படி, சீனியர்கள் வீரர்கள் அதிகம் இடம்பெற்றுள்ள நிலையில், சூர்யவன்ஷிக்கு துணைக் கேப்டன் பதவியை கொடுத்திருப்பது, பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சூர்யவன்ஷியின் கேப்டன்ஸி திறமையை சோதித்து பார்க்கதான், பிசிசிஐ இந்த முடிவினை எடுத்திருப்பதாக கருதப்படுகிறது.
கிஷனுக்கு நல்ல வாய்ப்பு: இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க, துலீப் டிராபி தொடரை, இஷான் கிஷன் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இவர், சமீபத்தில், ஜிம்பாப்வே டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டார். துலீப் டிராபியிலும் அபாரமாக செயல்பட்டு இரட்டை சதம் அடித்தால், அடுத்து டெஸ்ட் அணியிலும் இவரை சேர்க்க பிசிசிஐ பரிசீலிக்க வாய்ப்புள்ளது.
சீனியர்களுக்கும் நல்ல வாய்ப்பு: இந்திய டெஸ்ட் அணி, சமீப காலமாக சொதப்ப ஆரம்பித்துள்ளதால். அணியை பலப்படுத்த சீனியர்களை மீண்டும் சேர்ப்பது குறித்து பிசிசிஐ பரிசீலித்து வருகிறது. இதனால், துலீப் டிராபி தொடரில் முகமது ஷமி, முகேஷ் குமார், அபிமன்யு ஈஸ்வரன் போன்றவர்கள் அபாரமாக செயல்பட்டால், மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க வாய்ப்பு கிடைக்கும்.
மேலும், ஈஸ்ட் ஜோன் அணியில், சுதீப் குமார் ஹராமி, விராட் சிங், சுராஜ் சிந்து ஜெய்ஷ்வால், சுப்ரான்ஸு சேனாபதி, டேனிஷ் தாஸ், ஷிகம் மோகன் போன்ற இளம் பேட்டர்களும் அணியில் இடம்பெற்றுள்ளனர். குமார் குஷர்கா, பேக்கப் விக்கெட் கீப்பராக இருக்கிறார்.
மேலும், பந்துவீச்சு படையில் ஷமி, முகேஷ் குமார் போன்றவர்களுடன் அபிஜித் சர்காரும் இணைந்துள்ளார். ஆல்ரவுண்டர்கள் இடங்களில் ஷாபஸ் அகமது, அனுகுல் ராய் ஆகியோரும் இருக்கிறார்கள்.
ஈஸ்ட் ஜோன் அணி பட்டியல் : இஷான் கிஷன் (கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷ (துணைக் கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன், சுதிப் குமார் ஹராமி, ஷாபஸ் அகமது, சுராஜ் சிந்து ஜெய்ஷ்வால், முகமது ஷமி, முகேஷ் குமார், குமார் குஷக்ரா, ஷிகர் மோகன், அனுகுல் ராய், விராட் சிங், சுப்ரான்ஷு சேனாபதி, டேனிஸ் தாஸ், அபிஜித் சர்கார்.
ரிசர்வ் வீரர்கள்: ஆயுஷ் லொகாருகா, ஶ்ரீதம் பௌல், சம்பித் பரல், சரண்தீப் சிங், ஸ்வாதிகா சமல்.
துலீப் டிராபி 2026 தொடர் , ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் செப்டம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும். காலிறுதி சுற்றின் 2 போட்டிகளும் ஆகஸ்ட் 23ஆம் தேதி துவங்கவுள்ளது. அரையிறுதிப் போட்டி, ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்கும். இதனைத் தொடர்ந்து, இறுதிப் போட்டி செப்டம்பர் 6ஆம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய டெஸ்ட் அணி பலவீனமாக இருப்பதால், துலீப் டிராபியில் சிறப்பாக, அபாரமாக, மிரட்டலாக செயல்படும் வீரர்களுக்கு, உடனே இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கும் எனக் கருதப்படுகிறது.
