போதை ஆசாமிகளால் போலீஸ் துறைக்கே பாதுகாப்பு இல்லை: பழனிசாமி சாடல்

சிவகாசி: ”போதை ஆசாமிகளால் போலீஸ் துறைக்கே பாதுகாப்பு இல்லை. போலீசை எகிறி எகிறி அடிக்கின்றனர்,” என, சிவகாசியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பேசினார்.

அ.தி.மு.க., வேட்பாளர்கள் ராஜேந்திரபாலாஜி (சிவகாசி), ராஜவர்மன் (திருச்சுழி), சந்திரபிரபா (ஸ்ரீவில்லிபுத்துார்), சேதுபதி (அருப்புக்கோட்டை), கணேசன் (விருதுநகர்), த.ம.மு.க., வேட்பாளர் பிரிசில்லா (ராஜபாளையம்) ஆகியோரை ஆதரித்து சிவகாசியில் பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

சிவகாசி பட்டாசு உலக அளவில் விற்பனையாகிறது. இதற்கு எந்த தடையும் வரக்கூடாது என போராடியது அ.தி.மு.க., அரசு. விவசாயம், அச்சகம், தீப்பெட்டி தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத அரசாக அ.தி.மு.க., அரசு இருந்தது.

காவிரி – குண்டாறு திட்டத்தின் மூலம் கால்வாய் வெட்டி மேட்டூர் அணை உபரி நீரை கொண்டு வருவதால் வறண்ட மாவட்டமான விருதுநகர் செழுமையாகும். ரூ.14,000 கோடி ஒதுக்கி இத்திட்டத்தை நான் துவக்கினேன். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இத்திட்டத்தை தி.மு.க., அரசு முடக்கியுள்ளது. விவசாயிகளின் விரோதியாகவும், அவர்களை வஞ்சிக்கும் அரசாகவும் தி.மு.க., அரசு உள்ளது.

விருதுநகரில் ரூ.400 கோடிக்கு மருத்துவக்கல்லுாரி கொண்டு வந்தோம். அதற்கு தி.மு.க., அரசு ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டது. தி.மு.க., அரசு இந்த 5 ஆண்டுகளில் ஒரு மருத்துவக் கல்லுாரியையாவது கொண்டுவந்ததா.

ஒரே ஆண்டில் நாங்கள் 11 மருத்துவக் கல்லுாரிகளை கொண்டு வந்தோம். தி.மு.க., அரசால் நிரந்தர டி.ஜி.பி.,யை நியமிக்க முடியவில்லை. கையாலாகாத பொம்மை முதல்வர் ஆள்வதால் தான் இந்த நிலை. இன்று சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் தான் மாநிலம் வளர்ச்சி பெறும். ஆனால் முதல்வருக்கு எந்நேரமும் தன் குடும்பம் பற்றி தான் சிந்தனை. கஞ்சா பல வடிவங்களில் வந்து விட்டது. இந்த ஆட்சியில் குழந்தைகள் பாதிக்கப்படுவதை நம் கண் முன்னே பார்க்க முடிகிறது. கஞ்சா விற்பவர்களுக்கு தி.மு.க.,வினர் துணை நிற்கின்றனர். போதை ஆசாமிகளால் போலீஸ் துறைக்கே பாதுகாப்பு இல்லை. போலீசை எகிறி எகிறி அடிக்கின்றனர். இப்படிப்பட்ட மோசமான ஆட்சி தொடர வேண்டுமா. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் 3 மாதங்களில் கஞ்சா முழுமையாக ஒழிக்கப்படும்.

நான் இங்கு வந்தபோது தி.மு.க., ஆட்சி வேண்டாம் என்று எழுதப்பட்ட சட்டையை பெண்கள், குழந்தைகள் என்னிடம் தந்தனர். அ.தி.மு.க., ஆட்சி நிச்சயம் மலரும். அப்போது எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள் என கேட்டனர்.

2021 சட்டசபை தேர்தலின் போது 525 வாக்குறுதிகளை வெளியிட்ட தி.மு.க., நான்கில் ஒரு பங்கை கூட நிறைவேற்றவில்லை.

மின் கட்டண உயர்வால் அச்சகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் சுமை தாங்க முடியாமல் திணறுகின்றனர். அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் அமைச்சர் நேரு மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊழல் செய்வதில் தான் தி.மு.க., ஆட்சி முதன்மையாக உள்ளது. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி தான். ஊழலின் ஊற்றுக்கண் தி.மு.க., ஊழலையும் தி.மு.க.,வையும் பிரிக்க முடியாது.

2020-21ல் கிடைத்த வரி வருவாயை விட 2024-25ல் ரூ. ஒரு லட்சத்து 36 ஆயிரம் கோடி கூடுதல் வரி வருவாய் கிடைத்துள்ளது. ஆனால் இந்த அரசில் எந்த புது திட்டமும் வரவில்லை. அப்படியென்றால் வரிப்பணம் எங்கே போனது. மக்கள் பணத்தை சுருட்டும் தி.மு.க., ஆட்சி நமக்கு தேவையா. இவ்வாறு பேசினார்.

தி.மு.க.,

வேண்டாம் போடா

வாசகங்களுடன் சட்டை-

சிவகாசியில் பழனிசாமி தங்கி இருந்த தனியார் ஓட்டலை விட்டு வெளியே வந்த போது இளம் பெண்கள், மூதாட்டிகள் என 60 க்கும் மேற்பட்டோர் சந்தித்தனர். தி.மு.க., வேண்டாம் போடா, அ.தி.மு.க., ஆட்சியில் தான் பெண்களுக்கு பாதுகாப்பு, எங்களுக்கு இ.பி.எஸ்., தான் மீண்டும் வேண்டும், தி.மு.க., ஆட்சி எங்களுக்கு நரகம் உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட சட்டையை பழனிசாமியிடம் அளித்தனர். மேலும் பொம்மை சிஎம் வேண்டாம் நம்ம சிஎம் வேண்டும் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தி யிருந்தனர்.

Source link