பாலக்காடு: பாலக்காடு அருகே, போதை மாத்திரையுடன் வாலிபரை, கலால் துறை கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு இன்ஸ்பெக்டர் பிரேமானந்தகுமார் தலைமையிலான கலால் துறையினர், நேற்று காலை, 10:45 மணி அளவில் கோவை- – கொச்சி தேசிய நெடுஞ்சாலை வாளையார் சோதனை சாவடி அருகே, வாகனச்சோதனை நடத்தினர்.
அப்போது ஹைதராபாத்தில் இருந்து கொச்சி நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பஸ்சை தடுத்து நிறுத்தி, பயணிகளிடம் நடத்திய சோதனையில், கண்ணுார் மாவட்டம் தலச்சேரி கூத்துபரம்பு பகுதியைச் சேர்ந்த அப்துல் பஹத் 26, என்பவரின் பையில் இருந்து ரூ.3.80 லட்சம் மதிப்புள்ள, 94.5 கிராம் எம்.டி.எம்.ஏ., என்ற போதை மாத்திரையை மறைத்து வைத்திருப்பதைக்கண்டுபிடித்தனர்.
இதையடுத்து நடத்திய விசாரணையில், போதை மாத்திரையை கொச்சியில் விற்பனை செய்வதற்காக கொண்டு செல்வது தெரிந்தது. கைது செய்த அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
