போத்தனுார்: பெண் போலீசாருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த சர்ச்சையில், கோவை, தமிழ்நாடு நான்காவது

போத்தனுார்: பெண் போலீசாருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த சர்ச்சையில், கோவை, தமிழ்நாடு நான்காவது பட்டாலியன் கமாண்டன்ட் ஆக பணிபுரிந்த எஸ்.பி., செந்தில்குமார், சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை, கோவைபுதுார் பகுதியில், தமிழ்நாடு நான்காவது பட்டாலியன் படைப்பிரிவு உள்ளது. இதில், கமாண்டன்ட் ஆக எஸ்.பி., அந்தஸ்தில் உள்ள செந்தில்குமார், 2023 முதல் குடும்பத்துடன் தங்கி பணிபுரிகிறார்.

இவர், இங்கு பணிபுரியும் பெண்கள் மற்றும் பெண் போலீசாருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகவும், பாலியல் ரீதியாக அத்துமீறி பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக புகார்கள் பெறப்பட்ட நிலையில், கடந்த மாதம் அவர், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார். நிபந்தனையில், அரசின் அனுமதியின்றி தலைமையிடம் கடந்து செல்லக்கூடாது என, எச்சரிக்கப்பட்டார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்கள், கோவை தெற்கு மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, வழக்கின் அடிப்படையில், செந்தில் குமார் நேற்று கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக, மேலும் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாலியல் வழக்கில் கமாண்டன்ட் கைது செய்யப்பட்ட சம்பவம், பட்டாலியன் போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காமுகர்கள் பெருகிவிட்டனர்

‘வெல்லும் தமிழ் பெண்கள்’ என, போலியாக முழங்கும், தி.மு.க., ஆட்சியின் நிர்வாக திறன் இன்மையால், தெருதோறும் காமுகர்கள் பெருகி வருகின்றனர். மறுபுறம் காவல் அதிகாரிகளே காமுகர்களாக மாறிவருவது, பெண்கள் பாதுகாப்பை ஒட்டுமொத்தமாக கேள்விக்குறியாக்கி உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. தமிழக வரலாற்றில், இப்படி ஒரு கொடூரத்தை, இதுவரை யாரும் பார்த்தது இல்லை; இனி இந்த அறிவாலய ஆட்சி தொடர போவதும் இல்லை.
– நயினார் நாகேந்திரன், தமிழக பா.ஜ., தலைவர்

அரசு உறுதி செய்யணும்

போலீஸ் துறையில் பணியாற்றும் பெண்களுக்கு போதுமான பாதுகாப்பையும், கண்ணியத்துடன் பணியாற்றக்கூடிய பணி சூழலையும் தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும். இதற்கு முன், போலீஸ்துறை உயரதிகாரி ஒருவர், இன்னொரு போலீஸ் உயரதிகாரியால் எவ்வளவும் துாரம் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார் என்பதையும் அறிவோம். போலீஸ் துறையின் அனைத்து மட்டங்களிலும் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதை, தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும்.
– ஜோதிமணி, கரூர் காங்., – எம்.பி.,

Source link