கரியர், குடும்பம், உறவுகள் – வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் பல கேள்விகளும் சிக்கல்களும் நம்மைச் சுற்றி வரும். சில நேரங்களில் அந்த பிரச்னைகளை யாரிடமும் பகிர முடியாமல் மனதுக்குள் வைத்துக்கொண்டு வாழ்கிறோம்.
அப்படிப்பட்ட வாசகர்கள் அனுப்பும் வாழ்க்கைச் சிக்கல்களை இந்த தொடரில் பதிவு செய்து, அவற்றுக்கு நிபுணர்கள் வழங்கும் ஆலோசனைகளை உங்களிடம் கொண்டு வருகிறோம்.
“உறவுகளில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் பற்றி நிறைய பேசப்படுகிறது. ஆனால், ஆண்களுக்கும் சொல்லப்படாத சிக்கல்கள் இருக்கின்றன,” என்று தொடங்குகிறார் இந்த வாசகர்.
“எங்களுக்கு கல்யாணம் ஆகி 23 வருடங்கள் ஆகிறது. திருமணம் ஆன நாளிலிருந்தே, என் மனைவிதான் என் உலகம் என்று நினைத்து வாழ்ந்து வருகிறேன். அவங்க சொல்லும் டிரெஸ்ஸைத்தான் வாங்குவேன். வீட்டில் அவங்களுக்கு உதவ முடிந்த வேலைகளையும் செய்து கொடுப்பேன். என் சம்பளத்தையும் அவர்களிடமே கொடுத்து விடுவேன்.
முதல் இரண்டு வருடங்கள் எங்கள் திருமண வாழ்க்கை நன்றாகத்தான் சென்றது. ஆனால் அதன் பிறகு, என் மனைவியின் நடத்தையில் சில மாற்றங்கள் தெரிந்தது. நான் எங்க போனாலும் அவங்க என் கூடவே வர ஆரம்பிச்சாங்க. ஆபிஸ் வேலையா யாரிடமாவது பேசினால்கூட, ‘யார்கிட்ட பேசுற?’ என்று கேட்பாங்க. நான் இல்லாத நேரத்தில் என் போனை செக் பண்ணுவாங்க. என் சமூக வலைதளங்களில் இருக்கும் பெண்களின் புரொஃபைல்களை பார்த்து ‘இது யாரு? அது யாரு?’ என்று கேட்பாங்க. நான் யாருடைய போஸ்ட்டுக்கும் லைக் போட்டால்கூட அது ஒரு பிரச்னையாக மாறிவிடும்.

இதனால் வீட்டில் அடிக்கடி சண்டைகள் ஏற்பட ஆரம்பிச்சது. சண்டைகளை தவிர்க்க நான் என் போன் பாஸ்வேர்டையே மாற்றினேன். அதற்கே ஒரு புதிய சண்டை. நண்பர்களுடன் எங்காவது வெளியே போகவும் அனுமதி கிடைக்காது. வற்புறுத்தி கேட்டால் ‘நானும் கூட வர்றேன்’ என்று கிளம்பிவிடுவாங்க. ‘ஏன் உன் மனைவி எப்போதும் உன் கூடவே இருக்காங்க?’ என்று யாராவது கேட்டால், ‘அவருக்கு உடம்பு சரியில்லை… சரியாக சாப்பிடவில்லை… அவரை கவனிக்கத்தான் வந்திருக்கேன்’னு என்று சமாளிப்பாங்க.
நண்பர்கள் எல்லாரும் ‘உன் மனைவி உன்னை ரொம்ப நல்லா கவனிக்கிறாங்க’ என்று சொல்வார்கள். ஆனால் என் உண்மையான பிரச்னையை யாரிடமும் சொல்ல முடியாமல் நான் உள்ளுக்குள் தவிக்கிறேன். இப்போது என் மகன்களே கல்லூரி போகும் வயதில் இருக்கிறார்கள். ஆனாலும் என் மனைவியின் சந்தேகங்கள் இன்னும் தொடர்கிறது. இந்த சூழ்நிலையிலிருந்து நான் எப்படி வெளியே வருவது?” இப்படியான கேள்வியை விகடன் வாசகர் ஒருவர் அனுப்பியிருந்தார்.
இந்த பிரச்னை குறித்து உளவியல் ஆலோசகர் ப்ரினுவிடம் பேசினோம்.

“இவர் கூறியிருக்கும் பிரச்னை, பல ஆண்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் ஒன்றுதான். ஆனால், இங்கு அந்த பிரச்னையின் தீவிரம் கொஞ்சம் அதிகமாக இருப்பது போல தெரிகிறது. அவர் சொல்வதை வைத்து பார்க்கும்போது, அவரது மனைவிக்கு வாழ்க்கை தொடர்பான ஒரு பாதுகாப்பின்மை உணர்வு, ‘யாராவது விலகி சென்று விடுவாரோ’ என்ற அச்சம் அல்லது குழந்தைப் பருவத்தில் ஏற்பட்டிருக்கக்கூடிய ஏதோ ஒரு உளவியல் பாதிப்பு போன்றவை காரணமாக இருக்கலாம்.
கணவர் நண்பர்களுடன் சேர்ந்து தங்களை தவிர்த்து விடுவார்களோ, யாராவது தங்களை கணவரிடமிருந்து பிரித்து விடுவார்களோ, கணவருக்கும் தனக்கும் இடையில் தூரம் அதிகமாகிவிடுமோ என்ற உள்ளார்ந்த பயத்தின் வெளிப்பாடாகவும் இந்த நடத்தை இருக்கலாம். இதற்குக் காரணமாக, சந்தேகப்படும்படி அல்லது நெருடல் ஏற்படுத்தும் வகையில் ஏதாவது ஒரு சம்பவம் நடந்திருக்கவும் வாய்ப்புள்ளது. அந்த சம்பவம் குறித்து மனைவி கணவரிடம் கேட்டபோது சரியான பதில் கிடைக்காமல் இருந்திருக்கலாம். அல்லது கணவன் தெளிவாக விளக்கம் அளிக்காமல் இருந்திருக்கலாம்.

அதனால் அந்த சந்தேகம் அவர்களின் மனதில் தொடர்ந்து பெரிதாகி இருக்கலாம். கணவரின் போனிலும் நடத்தையிலும் எதுவும் இல்லையென்றாலும் கூட, ஒருமுறை ஏற்பட்ட அந்த அனுபவம் அவர்களை மீண்டும் மீண்டும் அதேபோல் எதிர்வினை அளிக்கச் செய்யும். இது பல ஆண்டுகளாகத் தொடர்வதற்கான முக்கிய காரணம், அந்த சந்தேகத்திற்கு தெளிவான விளக்கம் கிடைக்காததே. இதில் குழந்தைகளின் வயது அல்லது திருமணமாகி எத்தனை ஆண்டுகள் ஆனது என்பதெல்லாம் முக்கியமான விஷயமல்ல. குழந்தைகள் பெரியவர்களாகிவிட்டாலும், திருமணம் பல ஆண்டுகள் கடந்திருந்தாலும், அந்த சந்தேகம் தொடரக்கூடும்.
‘அப்படியானால் இத்தனை ஆண்டுகள் வாழ்க்கை எப்படி சென்றது?’ என்ற கேள்வியும் எழலாம். ஒரு கட்டத்தில் மனைவி சந்தேகப்படுவார், கணவன் சூழ்நிலையை சமாளிப்பார். சில நாட்கள் அமைதியாக இருக்கும். பின்னர் மீண்டும் அதே பிரச்னை தொடங்கும். இப்படியே ஒரு சுழற்சி போல இந்த நிலை தொடர்ந்திருக்கலாம்.
இதற்கான முக்கிய தீர்வு, தம்பதியருக்குள் வெளிப்படைத் தன்மை, நம்பிக்கை, சுயமரியாதை மற்றும் பரஸ்பர புரிதலை அதிகரிப்பதுதான். இருவரும் அமைதியாக அமர்ந்து தங்களுக்குள் உள்ள பிரச்னைகளை மனம் திறந்து பேச வேண்டும். ஒருவரின் உணர்வுகளை மற்றொருவர் பொறுமையாகக் கேட்டு புரிந்துகொள்ள வேண்டும்.
அதேபோல், உறவில் ‘பெர்சனல் ஸ்பேஸ்’ ஏன் அவசியம், நண்பர்களுடன் நேரம் செலவிடுவதன் முக்கியத்துவம் என்ன என்பதையும் பகிர்ந்து புரிய வைக்க வேண்டும். அதே நேரத்தில், எல்லாவற்றையும் விட தன் இணையரே முக்கியம், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கிறேன் என்பதையும் உணர்த்துவது அவசியம்.

இப்படி பேசி புரிந்துகொண்டு நம்பிக்கையை உருவாக்க முடிந்தால், உறவில் மீண்டும் நிம்மதி உருவாகும். ரகசியங்களை குறைத்து வெளிப்படத்தன்மையை அதிகரித்தால், பிரச்னையின் தீவிரமும் படிப்படியாக குறையும்.
தேவைப்பட்டால் உளவியல் ஆலோசகரை அணுகி பேசுவதும் நல்லது. சரியான வழிகாட்டுதலுடன் இந்த உறவை மீண்டும் ஆரோக்கியமான பாதைக்கு கொண்டு செல்லலாம்.”
தொடர்ந்து பேசுவோம்!
வாசகர்களே இந்த பிரசனைக்கு உங்கள் ஆலோசனைகளையும் கமென்ட்டில் பதிவு செய்யலாமே…
வாசகர்களே, இதே போல் நீங்கள் சந்திக்கும் சிக்கல்கள், உறவு பிரச்னைகளுக்கு தீர்வு வேண்டுமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். di*****@*****an.com என்ற மின்னஞ்சளுக்கு ‘ பேசும் மனது’ என Subject – ல் குறிப்பிட்டு உங்கள் அனுப்பவங்கள், சிக்கல்கள், பிரச்னைகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள். உங்கள் தனிநபர் விவரங்கள் பாதுகாக்கப்படும்! தேர்ந்தெடுக்கப் படுபவை உரிய தீர்வுகளுடனும், நிபுணர்களின் வழிகாட்டுத்கலுடனும் விகடன் தளத்தில் வெளியாகும்.!
