போபால்: மத்திய பிரதேசத்தில், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியான அவி பிரசாத், மூன்றாவது முறையாக திருமணம் செய்துள்ளார். அவர் திருமணம் செய்த மூன்று பேரும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்.
உத்தர பிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட அவி பிரசாத், வலுவான அரசியல் பின்னணி உடையவர்.
இவரது தாத்தா தாம்பேஸ்வர் பிரசாத், மறைந்த முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்கின் அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றியவர். அவி பிரசாத், 2013ல் சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, ஐ.பி.எஸ்., பணிக்கு தேர்வானார்.
பின், 2014-ல் மீண்டும் தேர்வு எழுதி, தேசிய அளவில், 13-வது இடத்தை பிடித்து, ஐ.ஏ.எஸ்., அதிகாரியானார். 2014 பேட்ச் ம.பி., கேடரைச் சேர்ந்த இவர், பல்வேறு மாவட்டங்களின் கலெக்டராகவும் பணியாற்றி உள்ளார்.
குறிப்பாக, கட்னி கலெக்டராக இருந்த போது, ஊட்டச்சத்து குறைபாட்டை ஒழிக்க அவர் எடுத்த அதிரடி நடவடிக்கைகள் பெரும் பாராட்டை பெற்றன.
தற்போது, ம.பி., வேலைவாய்ப்பு உறுதி கவுன்சிலின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், 2017 பேட்ச் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான அங்கிதா தாக்ரேவை, கடந்த 11ல், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி அவி பிரசாத் மூன்றாவது திருமணம் செய்துள்ளார்.
ஏற்கனவே, இரு முறை திருமணமாகி விவாகரத்து ஆன நிலையில், தற்போது மூன்றாவது திருமணம் செய்துள்ளார். இதில் சுவாரசியம் என்னவென்றால், அவி பிரசாத் திருமணம் செய்த மூன்று பெண்களும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்.
ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரிஜு பாப்னாவை அவி பிரசாத் முதல் திருமணம் செய்தார். சில ஆண்டுகளுக்கு பின், விவாகரத்து பெற்றனர். தற்போது, ம.பி.,யின் ஷாஜாபூர் கலெக்டராக ரிஜு பாப்னா பணியாற்றி வருகிறார்.
பின், 2016 பேட்ச் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான மிஷா சிங்கை அவி பிரசாத் மணந்தார். நான்கு ஆண்டுகளுக்கு பின், இருவரும் பிரிந்தனர். தற்போது, ம.பி.,யின் ரத்லம் கலெக்டராக மிஷா சிங் பணியாற்றி வருகிறார்.
மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி அவி பிரசாத் மூன்று முறை திருமணம் செய்துள்ளது, விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
