போரால் ஏற்பட்ட சேதங்களுக்கு ஈரான் இழப்பீடு தரவேண்டும் – ஐ.நா. சபையிடம் கத்தார் முறையீடு

ஈரான் தங்கள்மீது தொடர்ந்து டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், பதற்றம் அதிகரிப்பதைத் தடுக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு கத்தார் அரசு கடிதம் எழுதியுள்ளது.

ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான சபைத் தலைவர் ஜமால் ஃபாரெஸ் அல்ரோவாயி ஆகியோருக்கு அனுப்பப்பட்ட இரண்டு வெவ்வேறான கடிதங்களில், ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 6 வரை நடந்த தாக்குதல்கள் தங்கள் நிலப்பரப்பைக் குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், தங்கள் இறையாண்மை மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மையை ஈரான் மீறியதாகவும் கத்தார் கூறியுள்ளது.

வெவ்வேறு நாட்களில் ஏவப்பட்ட ஈரானின் பல ட்ரோன்கள் மற்றும் குரூஸ் ஏவுகணைகளைத் தங்கள் ஆயுதப் படைகள் இடைமறித்ததாகவும், அதில் நடந்த ஒரு ஏவுகணை இடைமறிப்பின்போது குடியிருப்புப் பகுதியில் பாகங்கள் விழுந்து சிதறியதில் நான்கு பேர் காயமடைந்ததோடு, இதனால் சொத்துக்களும் சேதமடைந்ததாகவும் கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முந்தைய தாக்குதல்களைக் கண்டித்தும், அவற்றை உடனடியாக நிறுத்தக் கோரியும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றிய தீர்மானம் 2817 (2026)-ஐ மீறி இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளதாக கத்தார் குறிப்பிட்டுள்ளது. இதற்கு காரணமானவர்கள்மீது ஐ.நா. சபை உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

மேலும் தங்களது இறையாண்மையையும், குடிமக்களையும் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் கத்தார் எடுக்கும் என எச்சரித்த அந்நாட்டு அரசு, இந்தச் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டிய கடமை ஈரானுக்கு உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்களால் ஏற்பட்ட அனைத்து சேதங்களும் இழப்புகளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் ஆவணப்படுத்தப்படும். அடுத்தடுத்த முன்னேற்றங்கள் குறித்து நாங்கள் உங்களுக்குத் தெரியப்படுத்துவோம்.” என தெரிவித்துள்ளது.

Source link