நமது நிருபர்
”போரில் நாங்கள் ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டோம். உங்கள் ஆதரவு தேவையில்லை” என பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை அதிபர் டிரம்ப் கடுமையாக சாடியுள்ளார்.
இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஒரு காலத்தில் நமது சிறந்த நட்பு நாடான, அனைத்திலும் சிறந்ததாக இருந்த பிரிட்டன், மத்திய கிழக்கு நாடுகளுக்கு இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களை அனுப்புவது குறித்து தீவிரமாக யோசித்து வருகிறது.
அது சரி, பிரதமர் ஸ்டார்மர், எங்களுக்கு இனி உங்களது ஆதரவு தேவையில்லை. ஆனால் நாங்கள் நினைவில் கொள்வோம். நாங்கள் ஏற்கனவே வெற்றி பெற்ற பிறகு போர்களில், உங்களது ஆதரவு எங்களுக்குத் தேவையில்லை. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
போர் தொடரும்
இதற்கிடையே நிருபர்கள் சந்திப்பில் அதிபர் டிரம்ப் கூறியதாவது: ஈரானுக்கு எதிரான போரில் வெற்றி பெற்று வருகிறோம். அவர்கள் நடத்திய அரசை முழுவதுமாக அழித்துவிட்டோம். சிறிது காலம் போர் தொடரும். போர் நம்ப முடியாத அளவிற்கு வெற்றியை பெற்று வருகிறது.
ஒரு வாரத்தில் யாரும் நினைத்ததை விட அதிகமாக நாங்கள் சாதித்துள்ளோம். ஈரானின் கடற்படை, 44 கப்பல்கள், விமானப்படையை அழித்துவிட்டோம். அவர்களின் பெரும்பாலான ஏவுகணைகளை நாங்கள் அழித்துவிட்டோம்.
ஏவுகணைகள் இனி அண்டை நாடுகளை அதிகம் தாக்காது. அவர்கள் ஏவுகணைகளை உருவாக்கும் உற்பத்திப் பகுதிகளையும் நாங்கள் மிகவும் கடுமையாகத் தாக்கியுள்ளோம். அவர்களின் ட்ரோன் உற்பத்தி திறன் மிகவும் குறைந்துவிட்டது. மேலும், அவர்களுக்கு வலிக்கும் இடங்களில் நாங்கள் காயப்படுத்தி உள்ளோம்.
அனைத்து வகையான தலைமைத்துவத்தையும் நாங்கள் அழித்துவிட்டோம். மினாபில் உள்ள ஈரான் பெண்கள் பள்ளியின் மீதான தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம். இதில் ஏராளமான மாணவிகள் கொல்லப்பட்டனர். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
