கொச்சி: ”மேற்காசிய பிராந்தியத்தில் போர் பதற்றம் நிலவும் நிலையில், அதை பயன்படுத்தி, காங்., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மக்களிடையே பீதியை ஏற்படுத்துகின்றன. அக்கட்சிகளிடம் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
கேரளாவில், மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது.
நேரடி போட்டி இங்கு, அடுத்த மாதம் தமிழகத்துடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில், ஆளும் கூட்டணிக்கும், காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
இந்த சூழலில், கேரளாவுக்கு நேற்று வந்த பிரதமர் மோடி, எர்ணாகுளம் மாவட்டத்தின் கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில், 10,000 கோடி ரூபாய் மதிப்புள்ள வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்தார். தொடர்ந்து, எர்ணாகுளத்தில் நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:
மேற்காசிய பிராந்தியத்தில் போர் பதற்றம் நிலவுகிறது. இந்த இக்கட்டான தருணத்தில், நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஆனால், இந்த நேரத்திலும் எதிர்க்கட்சிகள் அரசியலில் ஈடுபடுகின்றன.
எங்களது கடமை போர் பதற்றத்தை பயன்படுத்தி, நாட்டு மக்களிடையே காங்கிரசும், அதன் கூட்டணி கட்சிகளும் பீதியை ஏற்படுத்துகின்றன. இந்த கட்சிகளிடம் மக்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மேற்காசிய நாடுகளில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் உட்பட ஏராளமான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது எங்களது கடமை. என் அரசு ஒரு இந்தியரை கூட பாதுகாப்பற்ற நிலையில் விடாது. சவாலான காலங்களில் எரிசக்தி மற்றும் பிற துறைகளில் நம் நாடு தற்சார்பு அடைய அரசு பாடுபட்டு வருகிறது. உலகளாவிய நிச்சயமற்றத் தன்மைக்கு மத்தியிலும் நம் நாடு சுயசார்பில் இருக்க முயற்சி செய்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
பாலக்காடு –
பொள்ளாச்சி
ரயில் சேவை
கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, பாலக்காடு — பொள்ளாச்சி இடையிலான ரயில் சேவையை, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக துவக்கி வைத்தார். வாரத்தில், 5 நாட்கள் இயக்கப்படும் இந்த ரயில், பாலக்காடு டவுன், புதுநகரம், கொல்லங்கோடு, முதலமடை, மீனாட்சிபுரம் மற்றும் ஆனைமலை ரோடு ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும். மாலை, 6:45 மணிக்கு பாலக்காடு சந்திப்பு ரயில் நிலையத்தில் புறப்பட்டு, இரவு, 9:10-க்கு பொள்ளாச்சி சென்றடையும். காலை, 5:15 மணிக்கு பொள்ளாச்சி சந்திப்பிலிருந்து புறப்பட்டு, 7:00 மணிக்கு பாலக்காடு சந்திப்பை வந்தடையும். இந்த ரயில் சேவை எதிர்காலத்தில், பழநி வரை நீட்டிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
