உத்தரப் பிரதேச மாநிலத்தில் தாய்மார்களின் மகப்பேறு இறப்பு விகிதம் அதிகமாக உள்ள நிலையில், அதைக் குறைப்பதற்கான சிறந்த தீர்வுகளைக் கண்டறிய அந்த மாநிலத்தின் திட்டக்குழு அதிகாரிகள் தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மகப்பேறு இறப்பு விகிதம் மிகக் குறைவாக இருப்பதற்கான காரணங்கள் மற்றும் இங்குச் செயல்படுத்தப்படும் தனித்துவமான சுகாதாரத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதே இவர்களின் முதன்மை நோக்கமாகும். இதற்காகத் தமிழ்நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அவர்கள் விரிவான ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்தச் சந்திப்பின் போது, தமிழ்நாட்டில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் “டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம்’ குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் ரூ.18,000 நிதியுதவி மற்றும் ஊட்டச்சத்துப் பெட்டகங்கள் எவ்வாறு தாய்மார்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன என்பதை அதிகாரிகள் கேட்டறிந்தனர். பிரசவத்திற்கு முன்னும் பின்னும் வழங்கப்படும் இந்த ஆதரவு, இறப்பு விகிதத்தைக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர்.
