'மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்திருத்தம் அப்பட்டமான தேர்தல் நடத்தை விதிமீறல்': காங்., தலைவர் கார்கே குற்றச்சாட்டு

புதுடில்லி: ”மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவும், பார்லி., இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மத்திய பா.ஜ., அரசு எடுத்துள்ள முயற்சி, தேர்தல் நடத்தை விதிகளை மீறும் செயல். இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்,” என, காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டினார்.

சிறப்பு கூட்டத்தொடர் பார்லி., மற்றும் மாநில சட்டசபைகளில், மகளிருக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க, 2023 செப்டம்பரில், மத்திய பா.ஜ., அரசு சட்டம் இயற்றியது. எனினும், தொகுதி மறுவரையறை முடிந்த பின் இது அமலுக்கு வரும்.

தற்போதைய நிலவரப்படி, 2027ல் தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவடையும். எனவே, 2029 லோக்சபா தேர்தலுக்குள் இதை அமல்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதில் விரைந்து செயல்பட முடிவெடுத்த மத்திய அரசு, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த உள்ளது. இதன்படி, சட்டத்தில் திருத்தம் செய்யப்பட உள்ளது. இதற்காக வரும், 16 – 18 வரை பார்லி., சிறப்பு கூட்டத்தொடர் நடக்கிறது.

இந்நிலையில், தலைநகர் டில்லியில் நேற்று, காங்., செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தேசிய தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடந்தது. இதில், ராகுல், பிரியங்கா, கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், சச்சின் பைலட், கர்நாடக முதல்வர் சித்தராமையா, தெலுங்கானா முதல் வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், கார்கே பேசியதாவது: மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை அவசர கதியில் அமல்படுத்த மோடி அரசு முயற்சிக்கிறது. இது முழுக்க முழுக்க அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி.

இந்த சட்டத்திருத்தங்கள் நாட்டின் தேர்தல் முறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த விவகாரத்தில், எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஒற்றுமையாக செயல்படுவதற்கான கூட்டு உத்தியை காங்., வகுக்கும்.

விவாதம் தேவை தொகுதி மறுவரையறை தொடர்பான இத்திட்டம் கடும் விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, இது குறித்து பார்லி.,யில் விவாதம் நடத்த வேண்டும். தமிழகம், மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. அந்த மாநிலங்களின் எம்.பி.,க்கள், தங்கள் தொகுதிகளில் பணியில் இருப்பர். இந்த சூழலில் கூட்டத்தொடரை கூட்டுவது அப்பட்டமான தேர்தல் நடத்தை விதிமீறல். இவ்வாறு அவர் கூறினார்.

Source link