கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், தி.மு.க., – எம்.பி.,
நாங்கள் நினைத்த அளவுக்கு மக்களுக்குக் கொ டுக்கவில்லை, இன்னும் அள்ளி அள்ளி கொடுக்க வேண்டும் என்பது தான் எங்கள் ஆசை.
கொரோனாவில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழர்களை, கொடும் தொற்றில் இருந்து பாதுகாத்தது மட்டுமல்ல; வாழ்வாதாரம் கொடுத்தது தி.மு.க., அரசு. தேர்தல் வாக்குறுதி அளித்தபடி, மகளிருக்கு, 1,000 ரூபாய் உரிமை தொகை கொடுத்தது.
ஐந்து ஆண்டுகளில், மூன்று சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடந்துள்ளன. சென்னையில் சர்வதேச கார் பந்தயம் நடத்தப்பட்டது.
தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 505 வாக்குறுதி கள் அளிக்கப்பட்டு, அதில், 405 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. எந்த மாநில அரசும், முதல்வரும் செய்யாத சாதனை இது.
மத்திய அரசின் முட்டுக்கட்டையால், நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட 37 திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை என்பதுதான் உண்மை. இப்படி துறைதோறும் சாதனைகளை, தி.மு.க., அரசு செய்துள்ளது.
அடுத்து அமையவுள்ள தி.மு.க., 2.0 ஆட்சியில், இன்னும் பலவற்றைக் கொடுப்போம். பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், இளைஞர்களுக்கு எதிர்காலத்தை உறுதிப்படுத்துவது தான் அடுத்த அரசின் முக்கிய காரணிகளாக இருக்கும் என, முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்து உள்ளார். அதை உறுதிப்படுத்தும் வகையிலான அறிவிப்புகளை, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் எதிர்பார் க்கலாம்.
வைகைச்செல்வன், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்
தி. மு.க., என்ன கொடுத்தது? ஒன்றுமே இல்லை. கொரோனா காலத்தில், பாதிப்பையும் உயிர் பலியையும் குறைத்தவர் பழனிசாமி.
அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் பழனிசாமி. ‘நீட்’ தேர்வு விலக்கு வழங்காமல் ஏமாற்றி விட்டு, மாணவர்கள் மரணங்களை அதிகரித்தது தான், இவர்களின் சாதனை. காலை உணவு திட்டத்தை, தி.மு.க., அரசு கொண்டு வந்ததாக பெருமை பேசுகின்றனர். இந்த திட்டத்திற்கு அடித்தளம் அமைத்தவர் பழனிசாமி. அ.தி.மு.க., ஆட்சியில் ஆண்டுக்கு 100 அரசு துவக்க பள்ளிகள், நடுநிலை பள்ளிகளாகவும், நடுநிலை பள்ளிகள், மேல்நிலை பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டன. இன்றைக்கு அரசு பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன.
அ.தி.மு.க., ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு முறையாக பராமரிக்கப்பட்டது. அதை சறுக்கு விளையாட்டாக தி.மு.க., அரசு மாற்றி விட்டது. குடிநீர் கட்டணம், குப்பை வரி, வீட்டு வரி, சொத்து வரி உயர்த்தப்பட்டு உள்ளது. மின் கட்டணம், பால் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. மகளிருக்கு இலவச பயணம் எனக் கூறி விட்டு, பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டு, பணிக்கு செல்லும் ஆண்களின் செலவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கழுத்து வெளுத்தாலு ம் காகம் கருடன் ஆகாது; குறுக்கு சிறுத்தாலும் கிழவன் குமரன் ஆக முடியாது என்பதை போல, தலை கீழ் நின்று தண்ணீர் குடித்தாலும், தி.மு.க., இனி ஆட்சிக்கு வர முடியாது.
