வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல்
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் பிரச்சாரம் ஏப்ரல் 21 மாலை 5 மணியுடன் நிறைவடைய உள்ளது. இதனால் வேட்பாளர்கள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கில் தேர்தல் ஆணையமும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தேர்தல் நாளில் கட்டாய விடுமுறை
100 சதவீத வாக்குப்பதிவை இலக்காக கொண்டு மாநிலம் முழுவதும் பிரசாரங்கள் நடைபெற்று வருகின்றன. தேர்தல் நாளன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டதுடன் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் கட்டாய விடுமுறை வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதை மீறும் நிறுவனங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்துகள் இயக்கம்
வாக்காளர்கள் எளிதாக சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க, மொத்தம் 10,663 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்கான திட்டத்தை அரசு போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 21 முதல் 23 வரை வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக ஆயிரக்கணக்கில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கம்
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரம் போன்ற முக்கிய பேருந்து நிலையங்களில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு தனித்தனியாக பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும், இந்த நிலையங்களுக்கு இடையே இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும்.
ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவு
பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க, முன்கூட்டியே ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவு செய்து கொள்ளலாம். பேருந்து சேவை தொடர்பான தகவல்களுக்கு சிறப்பு உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டு, பயணிகள் சிரமமின்றி பயணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
