நாடு முழுதும், வரும் 2027ல் நடக்கவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதிவாரியான தரவுகளை பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதே சமயம், இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரரின் ஆலோசனைகளை ஏற்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளது.
வரும் 2027ல், 16வது தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. டிஜிட்டல் முறையில் மட்டுமின்றி, ஜாதிவாரியான கணக்கெடுப்பாகவும் இது அமையஉள்ளது.
இந்நிலையில், கல்வியாளரான ஆகாஷ் கோயல் என்பவர் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் முக்தா குப்தா ஆஜரானார்.
அப்போது அவர், ”மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது ஜாதி அடையாளத்தை கண்டுபிடிக்க என்ன மாதிரியான கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஜாதிகளை வகைப்படுத்துவதில் பின்பற்றப்படும் நடைமுறைகள் என்ன?
”பட்டியல் இனத்தவர், பழங்குடியினர்களை தாண்டி, பிற ஜாதியினரை அடையாளம் காண எந்த மாதிரியான அளவுகோல்களை அதிகாரிகள் பயன்படுத்துகின்றனர்.
”இந்த விபரங்கள் அனைத்தும் பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டும். மக்களின் ஜாதி அடையாளங்களை பதிவு செய்யும் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரகம் அதை ரகசியமாகவே வைத்திருக்கிறது,” என வாதிட்டார்.
இதைத் தொடர்ந்து அமர்வு பிறப்பித்த உத்தரவு:
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி என்பது, 1958ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட கணக்கெடுப்பு சட்டம் மற்றும் 1990ம் ஆண்டு உருவாக்கப்பட்ட விதிகளின் கீழ் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்த விதிகள், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகளையும், முறைகளையும் தீர்மானிக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கின்றன.
மனுதாரர் அச்சப்படுவது போல, தவறுகள் நடக்காதபடி, அரசு அதிகாரிகளும், துறை சார்ந்த நிபுணர்களும் இதில் வலுவான கட்டமைப்பை உருவாக்கியிருப்பர் என நம்புகிறோம்.
அதே சமயம் மனுதாரர் வழங்கிய ஆலோசனைகள், கருத்துகளை மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவாளர் ஜெனரலும், மத்திய அரசும் பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அமர்வு உத்தரவிட்டுள்ளது.
– டில்லி சிறப்பு நிருபர் –
