'மக்கள் தொடர்பு திட்டங்களுக்கு ஆர்.எஸ்.எஸ்., முக்கியத்துவம்'

சண்டிகர்: ”ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கிளைகளை விரிவுபடுத்தவும், மக்கள் தொடர்பு திட்டங்கள் வாயிலாக சமூகத்தில் இணைப்பை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது,” என, அந்த அமைப்பின் இணை பொதுச்செயலர் சி.ஆர்.முகுந்த் தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு அதன் நுாற்றாண்டு விழாவை கொண்டாடி வருகிறது. இந்நிலையில், அந்த அமைப்பின் உயர்மட்ட முடிவுகளை எடுக்கும் அகில பாரதிய பிரதிநிதிகள் சபையின் கூட்டம், ஹரியானாவில் நேற்று துவங்கியது.

சமல்காவில் நடந்த நிகழ்ச்சியை, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், பொதுச்செயலர் தத்தாத்ரேய ஹோசபலே ஆகியோர் துவக்கி வைத்தனர்.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மூத்த நிர்வாகிகள், 1,500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் இணை பொதுச் செயலர் முகுந்த் பேசியதாவது:

‘கிருஹசம்பர்க்’ திட்டத்தின் கீழ், நாடு முழுதும் 10 கோடிக்கும் மேற்பட்ட வீடுகளை ஆர்.எஸ்.எஸ்., சென்றடைந்துள்ளது.

மேலும், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள், இந்த திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன.

நல்லிணக்க கூட்டங்கள், முக்கிய பிரமுகர்களின் வட்டங்கள் வாயிலாக சமூகத்தில் நேர்மறையான தாக்கங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கேரளாவில் முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், கம்யூனிச சார்புடைய தனிநபர்களுக்கு சொந்தமான வீடுகள் உட்பட பல குடும்பங்களை ஆர்.எஸ்.எஸ்., சென்றடைந்துள்ளது.

எங்கள் தொண்டர்கள் 55,000 முஸ்லிம் மற்றும் 54,000 கிறிஸ்துவ குடும்பங்களை சென்றடைந்தனர். மக்கள் தொடர்பு முயற்சி வாயிலாக, அங்கு பழங்குடியின பகுதிகளையும் ஆர்.எஸ்.எஸ்., கவர்ந்துள்ளது.

அமைப்பின் நுாற்றாண்டு விழா கொண்டாடப்படும் வேளையில், இரு முக்கிய விஷயங்களில் ஆர்.எஸ்.எஸ்., கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. ஒன்று, அதன் கிளைகளை விரிவுபடுத்துவது. மற்றொன்று, மக்கள் தொடர்பு திட்டங்கள் வாயிலாக சமூகத்தில் இணைப்பை ஏற்படுத்துவது.

இவ்வாறு அவர் பேசினார்.

Source link