`மசினகுடியின் அடையாளம்‌ மட்டுமல்ல எங்களின் செல்லக் குழந்தை' – ரிவால்டோ யானை மறைவால் கண்ணீரில் மக்கள்

மசினகுடியின் அடையாளமாகவே வலம் வந்துக் கொண்டிருந்த 50 வயது ஆண் யானையின் மறைவு வனத்துறையின் களப்பணியாளர்கள் மட்டுமின்றி உள்ளூரைச் சேர்ந்த சாமானிய மக்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ரிவால்டோ

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடமாடி வந்த ஆண் யானை ஒன்றிற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தும்பிக்கையில் காயம் ஏற்பட்டுள்ளது. குணப்படுத்த முடியாத அளவிற்கு நிரந்தர குறைபாடாக மாறியதால் உணவுக்காக குடியிருப்பு பகுதியில் தஞ்சமைடையும் நிலைக்கு தள்ளப்பட்டது.

 ரிவால்டோ காட்டு யானை
ரிவால்டோ காட்டு யானை

ரிவால்டோ

ரிவால்டோ என உள்ளூர் மக்களால் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வந்த அந்த ஆண் யானை, மிகவும் கம்பீரமாக தோற்றமளித்தாலும் மக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தாமல் நட்பு பாராட்டி வந்தது. இதனை சாதகமாக்கிக் கொண்ட தனியார் தங்கும் விடுதிகள் சில, ரிவால்டோ யானையை சுற்றுலா பயணிகள் மத்தியில் காட்சிப் பொருளாக மாற்றி வேடிக்கை காண்பித்து லாபம் ஈட்டி வந்தன.

தொடர்ந்து குடியிருப்பு பகுதியிலும் சாலை ஓரங்களிலும் உணவு தேடி வந்த இந்த யானையை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டுச் செல்ல வனத்துறையினர் முடிவு செய்தனர். அதற்கான முயற்சியில் ஈடுபட்டு பிரத்யேக மரக்கூண்டிலும் ரிவால்டோ யானையை அடைத்தனர். இந்த விவகாரத்தில் தலையிட்ட சென்னை உயர்நீதிமன்றம், அந்த யானைக்கு சிகிச்சை அளித்து மீண்டும் வனப்பகுதிக்குள் விடுவிக்க வேண்டும் என 2021 – ம் ஆண்டு உத்தரவிட்டது. 8 பேர் கொண்ட நிபுணர்கள் குழுவினர் ரிவால்டோ யானை குறித்து ஆய்வு மேற்கொண்டு மீண்டும் வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.

ரிவால்டோ யானை
ரிவால்டோ யானை

ரேடியோ காலர் பொருத்தப்பட்ட அந்த யானையை 24 மணி நேரமும் வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் வனத்துறையினரின் கண்காணிப்பில் இருந்து மறைந்த ரிவால்டோ யானை, கடந்த சில நாள்களுக்கு முன்பு மீண்டும் தென்பட்டது. உடலின் பல இடங்களிலும் கடுமையான காயங்களுடன் காணப்பட்ட‌ அந்த யானைக்கு வனத்துறையினர் கடந்த மூன்று நாள்களாக சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி ரிவால்டோ யானை நேற்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தது. மசினகுடியின் அடையாளமாகவே வலம் வந்துக் கொண்டிருந்த 50 வயது ஆண் யானையின் மறைவு வனத்துறையின் களப்பணியாளர்கள் மட்டுமின்றி உள்ளூரைச் சேர்ந்த சாமானிய மக்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

`மசினகுடியின் அடையாளம்‌ மட்டுமல்ல எங்களின் செல்லக் குழந்தை' - ரிவால்டோ யானை மறைவால் கண்ணீரில் மக்கள்

ரிவால்டோ யானை குறித்து உள்ளுர் மக்கள், ” கடந்த 20 ஆண்டுகளாக ரிவால்டோ யானை மசினகுடி பகுதியில் நடமாடி வந்தது. இதுவரை யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுத்ததில்லை. ஒருபோதும் கோபமாக நடந்ததில்லை. மசினகுடியின் அடையாளம் மட்டுமில்லை. எங்களின் செல்லக் குழந்தை இந்த ரிவால்டோ. அதனால் தான் எல்லோரும் ரிவால்டோவிற்காக கண்ணீர் வடிக்கிறார்கள்” என்றனர்.

Source link