'மஞ்சும்மல் பாய்ஸ்' திரைப்பட இயக்குநர் மீது பாலியல் புகார்

எர்ணாகுளம்: மலையாள திரையுலகில், 2021ல் பசில் ஜோசப் நடிப்பில் வெளியான ஜான்.இ.மேன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சிதம்பரம்.

அதன்பின், 2024ல் தமிழகத்தின் கொடைக்கானலில் உள்ள குணா குகையை மையப்படுத்தி, மஞ்சும்மல் பாய்ஸ் என்ற திரைப்படத்தை எழுதி இயக்கினார்.

இது, கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. தற்போது இயக்குநர் சிதம்பரம், ஹிந்தி திரைப்படத்தை இயக்கி வருகிறார். அவர் மீது எர்ணாகுளம் போலீஸ் நிலையத்தில் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.

அதில், ‘கொச்சியின் எலம்குளம் பகுதியில் உள்ள என் அடுக்குமாடி குடியிருப்புக்குள், 2022ல் அத்துமீறி நுழைந்த இயக்குநர் சிதம்பரம், என்னிடம் பாலியல் ரீதியாக தகாத முறையில் நடந்து கொண்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, சிதம்பரம் மீது போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்தனர். விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு விரைவில் சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர். இது குறித்து சிதம்பரம் தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

Source link