உக்ரூல்: மணிப்பூரில் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக 21 வீடுகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தால் அங்கு மீண்டும் பதற்றம் எழுந்துள்ளது.
மணிப்பூரில் குகி, மெய்தி இன மக்கள் இடையேயான ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக மாறியது. இருதரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டதில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக மணிப்பூர் பற்றி எரிந்தது. கிட்டத்தட்ட 250க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். தொடரும் வன்முறை மற்றும் கலவரம் எதிரொலியாக பைரேன் சிங் தலைமையிலான பாஜ அரசு ஆட்சியில் இருந்து விலகியது. பின்னர் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
கெம்சந்த் சிங் தலைமையில் புதிய பாஜ அரசு பிப்.4ம் தேதி பதவியேற்றது. குகி இனத்தைச் சேர்ந்த நெம்சா கிப்ஜென் துணை முதல்வராக தேர்வானார். பாஜ தலைமையிலான அமைச்சரவையில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி இன மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந் நிலையில், உக்ருல் மாவட்டத்தில் உள்ள லிட்டன் சாரேக்ஹாங் பகுதியில் ஆயுதம் ஏந்திய அடையாளம் தெரியாத கும்பல் வன்முறையில் இறங்கியது. அங்குள்ள 21 வீடுகளை சூறையாடியதோடு, வாகனங்களுக்கும் தீ வைத்தது.
கைகளில் ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல், வன்முறையில் இறங்கியதால் அங்கு பதற்றம் உருவானது.அவர்களின் வன்முறையில் கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகின. அச்சம் அடைந்த பலரும், அருகில் உள்ள காங்போக்பி மாவட்டத்திற்கு தப்பிச் சென்றனர்.
லன்முறை சம்பவத்தை அடுத்து, லிட்டன் சாரேக்ஹாங் பகுதியிலும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் கூடுதலாக பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், சூழலை புரிந்து கொண்டு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.
