தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும், ஆட்சியை பிடிக்க அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றனர். இது தவிர நாதக, தவெக ஆகிய கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேட்புமனு தாக்கல் தொடங்கிய மார்ச் 30 ஆம் தேதியே வேட்புமனுவை தாக்கல் செய்த தவெக விஜய் பெரம்பூர் மற்றும் கொளத்தூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து வில்லிவாக்கம் தொகுதியில் அவர் மேற்கொள்ள இருந்த பிரச்சாரம் நின்றது.
பாதுகாப்பு காரணமாக விஜய்யின் வில்லிவாக்கம் தேர்தல் பரப்புரை திடீரென ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. விஜய்யின் பரப்புரைக்கு சரியான போலீஸ் பாதுகாப்பு கொடுக்கவில்லை என்றும் திமுகவுக்கு ஆதரவாக சில அதிகாரிகள் திட்டமிட்டு சதி செய்வதாகவும் தவெகவினர் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முக்கிய நிர்வாகியான சி.டி.நிர்மல்குமாரின் செயல் கேலிக்குள்ளாகி உள்ளது. பிரபலங்களுக்கு கொடுக்கப்படும் ஒய், இசட் பிரிவு பாதுகாப்புகளை நிர்வகிக்கும் மத்திய அரசின் உள்துறைக்கு தவெக நிர்வாகி சி.டி.ஆர்.நிர்மல்குமார் பாதுகாப்பு முறைகளை மேம்படுத்த கோரிக்கை வைத்து கடிதம் எழுதியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பார்வைக்குக் கொண்டு செல்லும் வகையில் மத்திய உள்துறை செயலாளருக்கு சி.டி.ஆர்.நிர்மல்குமார் கடிதம் எழுதியுள்ள நிலையில், அதில் உள்துறை செயலாளர் பெயர் இடத்தில் அஜய்குமார் பல்லா பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான அஜய் குமார் பல்லா கடந்த ஐந்து ஆண்டுகள் மத்திய உள்துறை செயலாளராகப் பணியாற்றிய நிலையில் கடந்த 2025 ஜனவரி மாதமே மணிப்பூர் மாநில ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போதைய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் ஐஏஎஸ் என்ற நிலையில் மணிப்பூர் ஆளுநராக உள்ள அஜய்குமார் பல்லாவுக்கு சி.டி.ஆர் நிர்மல்குமார் கடிதம் எழுதியுள்ளது சமூக வலைத்தளங்களில் கேலிக்குள்ளாகி வருகிறது.
