மணிலா: மேற்காசிய போர் காரணமாக நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டால், பிலிப்பைன்ஸ் நாட்டில் அவசரநிலை

மணிலா: மேற்காசிய போர் காரணமாக நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டால், பிலிப்பைன்ஸ் நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. போருக்குப் பின் இந்த முடிவை எடுத்த முதல்நாடு இதுவாகும்.

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் கிட்டத்தட்ட ஒரு மாதத்தை நெருங்கி விட்டது. இதன் ஒரு பகுதியாக, ஹார்முஸ் ஜலசந்தியை மூடி, உலக நாடுகளிடையே எரிபொருள் தட்டுப்பாட்டை ஈரான் ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல், சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால், பல்வேறு நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

எனவே, சர்வதேச எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் திறந்து விட வேண்டும் என்று இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்த நிலையில், போர் காரணமாக நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டால், பிலிப்பைன்ஸில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் தனது எண்ணெய் தேவையில் 98 சதவீதம் வளைகுடா நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்து வருகிறது. போர் காரணமாக ஏற்பட்ட தட்டுப்பாட்டால், அங்கு டீசல் மற்றும் பெட்ரோல் விலை இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது.

இந்த சூழலில், எரிபொருள் விநியோகத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கலை தீர்ப்பதற்காக, அதனை பாதுகாக்க வேண்டிய நிர்வாக ஆணையில் அந்நாட்டு அதிபர் பெட்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் கையெழுத்திட்டுள்ளார். இதன்மூலம், எரிபொருள் கையிருப்பை அதிகரிக்க, பெட்ரோலியப் பொருட்களை நேரடியாகக் கொள்முதல் செய்ய அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள், உணவு, மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் முறையான விநியோகத்தைக் கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அவசர நிலை ஓராண்டு காலத்திற்கு அமலில் இருக்கும். அரசின் இந்த நடவடிக்கைக்கு முக்கிய தொழிலாளர் அமைப்பான கிலுசாங் மாயோ யூனோ, கடும் விமர்சனம் தெரிவித்துள்ளது. எண்ணெய் நெருக்கடியைக் கையாள்வதில் அரசாங்கம் தோல்வியுற்றதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Source link