மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஆகாஷ் என்பவருக்கு திருமணம் முடிவாகி இருந்தது. இதற்காக திருமண மண்டபத்திற்கு உறவினர்கள் வந்து குவிந்து இருந்தனர். மணமகன் மணக்கோலத்தில் இருந்தார். அந்நேரம் திடீரென போலீஸ் வேன் ஒன்று திருமண மண்டபத்திற்கு வந்தது. அதில் இருந்து இறங்கிய போலீஸார் நேரடியாக உள்ளே சென்று மணமகன் ஆகாஷை கைது செய்தனர். இதனால் திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆகாஷ் ஒரு கேங்க்ஸ்டர் என்றும், அவர் ஒரு கிரிமினல் கூட்டத்தின் தலைவன் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.
இதனை கேட்டு திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். திருமண சடங்குகள் தொடங்கும் முன்பாகவே ஆகாஷை கைது செய்தனர். ஆகாஷ் கூட்டாளிகளும் திருமணத்திற்கு வந்திருந்தனர். ஆகாஷுடன், அவரது கூட்டாளிகளான ராஜாம்ஜி தாக்கூர், அபிஷேக் உபாத்யாய், அபிஷேக் மீனா, நீரஜ் காங்கே மற்றும் அமித் ஓஸ்வால் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதனை விருந்தினர்கள் நம்ப முடியாமல் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றவுடன் அவர் திருமணம் செய்து கொள்ள இருந்த மணமகள் போலீஸ் நிலையத்திற்கு சென்றார்.
அவர், ”சார் இந்த திருமணம் நின்றுவிட்டால் எனது வாழ்க்கை அழிந்துவிடும். நான் என்ன தவறு செய்தேன். அவர் செய்த குற்றங்கள் எனக்குத் தெரியாது. விருந்தினர்கள் வீட்டில் காத்திருக்கிறார்கள். ஹால்தி மற்றும் பிற சடங்குகள் முடிந்துவிட்டன,” என்று கூறி மணமகள் சீமா போலீஸ் அதிகாரிகள் முன் அழுதார். அதோடு கண்ணீருடன் திருமண சடங்குகளை முடிக்க தனது வருங்கால கணவர், ஆகாஷை இரண்டு மணி நேரம் மட்டும் விடுவிக்குமாறு போலீசாரிடம் கெஞ்சினார். ஆனால் அதற்கு அதிகாரிகள் மறுத்தனர்.
அவரது விடுதலை செய்யவில்லை என்றால், திருமண சடங்குகளை போலீஸ் நிலையத்தில் நடத்திக்கொள்ள அனுமதிக்கவேண்டும் சீமா கோரிக்கை விடுத்தார். ஆனால் போலீஸார் அதற்கும் அனுமதிக்கவில்லை.
மணமகன் மீது 31 வழக்குகள்
ஆகாஷ் தலைமையில் 2018ம் ஆண்டில் இருந்து போபாலில் சட்டவிரோத கும்பல் செயல்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
இக்கும்பலில் போபால் வாஜ்பாய் நகர் பகுதியைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருக்கின்றனர். அவர்களில் பலர் தங்களது விசுவாசத்தின் அடையாளமாக “சட்டவிரோதம்” என்ற வார்த்தையை கழுத்தில் பச்சை குத்தியுள்ளனர் என்று போலீஸார் தெரிவித்தனர். ஆகாஷ் மீது 31 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2024ம் ஆண்டு போபாலில் பா.ஜ.க பிரமுகர் சுரேந்திரா என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆகாஷ் தான் முக்கிய குற்றவாளியாவான். இதற்கான அவனை கைது செய்து 18 மாதங்கள் சிறையில் அடைத்திருந்தனர். கடந்த 4 மாதத்திற்கு முன்புதான் ஆகாஷ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டான்.
தற்போது ஆள்கடத்தல் வழக்கு ஒன்று தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். 26 வயதான ஒரு பூசாரியை அந்த கும்பல் கடத்திச் சென்று, ஈத்கா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் அடைத்து வைத்து, 8 லட்சம் ரூபாய் பணயத்தொகையாகக் கேட்டு அவரை மிகக் கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பணத்தைக் கொடுக்கத் தவறினால், கற்பழிப்பு வழக்கில் சிக்கவைப்பதாக அந்தப் பூசாரி மிரட்டப்பட்டார்.
அந்தப் பூசாரியின் சகோதரரை மிரட்டி 50,000 ரூபாயை ஆன்லைன் மூலம் பெற்றுக்கொண்ட அந்தக் கும்பல், எஞ்சிய 7.5 லட்சம் ரூபாயைத் தவணைகளாக ஏற்பாடு செய்து தருமாறு அவரது குடும்பத்தினருக்குத் தொடர்ந்து நெருக்கடி கொடுத்ததாகப் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இக்கும்பல் கடத்தி வைத்திருந்த பூசாரி அவர்களிடமிருந்து தப்பித்து வந்து போலீஸில் புகார் செய்ததை தொடர்ந்தே இப்போது ஆகாஷ் கைது செய்யப்பட்டுள்ளான்.
