மதமாற்ற தடை சட்ட வழக்கு; 12 மாநிலங்களுக்கு 'நோட்டீஸ்'

மதமாற்ற தடைச் சட்டங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் பதிலளிக்கும் மத்திய அரசு மற்றும் 12 மாநில அரசுகளுக்கு, உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஹரியானா, கர்நாடகா உட்பட பல மாநிலங்களில் மதமாற்ற தடை சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இதற்கு எதிராக இந்திய தேசிய கிறிஸ்துவ சபைகள் கவுன்சில் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த மனு மீது சம்பந்தப்பட்ட 12 மாநில அரசுகளும் மத்திய அரசும், நான்கு வார காலத்திற்குள் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் பிறப்பித்து, வழக்கை தலைமை நீதிபதி ஒத்திவைத்தார்.

மேலும், இதே விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து, மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரணைக்காக பட்டியலிடப்படும் எனவும் அவர் உத்தரவு பிறப்பித்தார்.

– டில்லி சிறப்பு நிருபர் –

Source link