சென்னை: பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட தனித் தொகுதிகளில், ஹிந்து, சீக்கிய, பவுத்த மதங்களை பின்பற்றும் பட்டியலினத்தவர் மட்டும் போட்டியிட அனுமதிக்க உத்தரவிட கோரி, ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தாக்கல் செய்த வழக்கு, இன்று விசாரிக்கப்பட உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 234 தொகுதிகளில், 44 தொகுதிகள் பட்டியலினத்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தனித்தொகுதிகளில், ஹிந்து, சீக்கியம், பவுத்தம் ஆகிய மதங்களை பின்பற்றும் பட்டியலினத்தவரையே போட்டியிட அனுமதிக்க உத்தரவிடுமாறு, சென்னை உயர் நீதிமன்றத்தில், அர்ஜுன் சம்பத் மனு தாக்கல் செய்து உள்ளார்.
மனுவில், ‘தனித் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில், 90 சதவீதத்தினர் கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர்கள். எனவே, வேட்பு மனு பரிசீலனையின் போது, அரசியல் சாசனம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தீவிரமாக ஆய்வு செய்யுமாறு, அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்’ என குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், அர்ஜுன் சம்பத் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கார்த்திகை பாலன், “தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஏப்.6ல் முடிவடைந்ததால், மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்,” என, கோரிக்கை விடுத்தார். இதை ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு, அர்ஜுன் சம்பத்தின் வழக்கை, இன்று விசாரணைக்கு எடுத்து கொள்வதாக தெரிவித்தது.
