மதுபோதையில் தறிகெட்டு ஓடிய கார் – 12 வயது சிறுவன் பலியான வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி வழக்கு – 12-year-old boy death case: fresh warrant against businessman

கடந்த 2013-ஆம் ஆண்டு சென்னை எழும்பூரில் மதுபோதையில் காரை ஓட்டி நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மோதியதில் 12 வயது சிறுவன் உயிரிழந்தவழக்கில், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாத தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமனுக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் மீண்டும் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

சென்னையின் எழும்பூர் பாந்தியன் சாலையில் கடந்த 2013 மே 22-ஆம் தேதி, நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மதுபோதையில் சொகுசு காரை ஓட்டிச் சென்றதாக கூறப்படும் விபத்தில், 12 வயது சிறுவன் உயிரிழந்தான். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில், EMPEE குழுமத்தின் தலைவர் எம்.என். புருஷோத்தமனின் மகன் ஷாஜி புருஷோத்தமன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது.

குற்றவாளி என அறிவித்த அமர்வு நீதிமன்றம்

இந்த வழக்கை விசாரித்த சென்னை 7-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பி. ஸ்ரீகுமார், ஷாஜி புருஷோத்தமனை குற்றவாளி என அறிவித்திருந்தார். எனினும், தீர்ப்பு அறிவிக்கப்பட்ட நாளில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

உயர்நீதிமன்றத்தில் கிடைத்த தற்காலிக நிவாரணம்

பின்னர், பிடிவாரண்டை எதிர்த்து ஷாஜி புருஷோத்தமன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், பிடிவாரண்டை திரும்பப் பெற்று, விசாரணை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது.

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்தது… நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

நேரில் ஆஜராக விலக்கு கோரிய மனு நிராகரிப்பு

இந்த வழக்கு மீண்டும் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, முதுகுத் தண்டுவட பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் நேரில் ஆஜராகவிலக்கு அளிக்க வேண்டும் என்றும், காணொலி காட்சி வாயிலாக ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்றும் ஷாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மீண்டும் பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்

ஆனால், உயர்நீதிமன்றம் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்த நிலையிலும் அதனை பின்பற்றவில்லை என்பதால், ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று அமர்வு நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், குற்றவாளிக்கு தண்டனை விவரங்களை அறிவிக்கும்போது அவர் கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என்பதால், காணொலி காட்சி மூலம் ஆஜராக அனுமதி கோரிய மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, ஷாஜி புருஷோத்தமனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் வகையில் மீண்டும் பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிபதி, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜூலை 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Source link