செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே கணவனுடன் பைக்கில் சென்ற நிறைமாத கர்ப்பிணி மனைவி சாலை விபத்தில் பலியானார். இந்த விபத்தில் பைக் தீப்பிடித்து எரிந்தது.
இதுபற்றிய விவரம் வருமாறு;
மதுராந்தகம் அடுத்த மோச்சேரியைச் சேர்ந்தவர் வாசுதேவன்(25). இவரின் மனைவி மோனிகா(25). நிறைமாத கர்ப்பிணி.
அவரை, வாசுதேவன் மருத்துவ பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வாகனத்தின் முன்னால் உட்கார்ந்து வாசுதேவன் ஓட்ட, பின்னால் மோனிகா அமர்ந்துள்ளார்.
இவர்களின் வாகனம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திண்டிவனம் நோக்கி அசுர வேகத்தில் வந்த கார் ஒன்று, இவர்களின் வாகனம் மீது மோதியது.
இந்த விபத்தில் பைக்கில் இருந்த வாசுதேவன், மோனிகா இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அவர்களின் வாகனம் தீப்பிடித்து எரிந்தது. இதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக இருவரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருவரும் அனுமதிக்கப்பட, மோனிகா உயிரிழந்தார்.
தகவலறிந்த போலீசார் விசாரணை நடத்தி, விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் விக்னேஸ்வரன் என்பவரை கைது செய்தனர்.
