மதுரையில் அமைச்சர் தியாகராஜன் பெயரைக்கூறி மற்றொரு உதவியாளரும் ரூ.பல கோடி சுருட்டல்

மதுரை : மதுரையில், அமைச்சர் பெயரைக்கூறி, மோசடியில் ஈடுபட்ட, மற்றொரு முன்னாள் உதவியாளர் இலக்குவனை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரையில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தியாகராஜன், முன்னாள் மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் பெயரை பயன்படுத்தி, பல கோடி ரூபாய் ரியல் எஸ்டேட் மோசடியில் ஈடுபட்ட அமைச்சரின் முன்னாள் உதவியாளர் ஜெய் பாலாஜி, 42, அவரது மனைவி கலாவதி 42, ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பிப்., 5ல் கைது செய்தனர்.

ஜெய் பாலாஜி போல் மற்றொரு உதவியாளராக இருந்தவர் இலக்குவன். இவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர். அமைச்சர் தியாகராஜன் தி.மு.க.,வில் ஆரம்பித்த தகவல் தொழில்நுட்பப் பிரிவில் மாநில துணை அமைப்பாளராக இருந்தார். இவரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார்.

திருநெல்வேலி தொழிலதிபர் ஒருவரின் 14 கோடி ரூபாய் பணம் இலக்குவன், ஜெய் பாலாஜி கைக்கு வந்தபோது அதை அமைச்சரிடமிருந்து மறைக்க நினைத்தபோதுதான் இருவர் மீதும் நடவடிக்கைகள் ஆரம்பமானதாக தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.

ஜெய் பாலாஜி கைதை தொடர்ந்து இலக்குவன் தலைமறைவானார். சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. வெளிநாடு ஒன்றில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து, விமான நிலையங்களுக்கு ‘லுக் அவுட்’ நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

Source link