மதுரையில் பிரதமர் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடுகள் தீவிரம்: இடம் மாறுகிறது அரசு நிகழ்ச்சி

மதுரை : மதுரையில், பிரதமர் மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணி பிரசார கூட்ட மேடை அருகே நடைபெற இருந்த அரசு நிகழ்ச்சிகள், விமான நிலைய வளாகத்திற்குள் இடம் மாறுகிறது.

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, தே.ஜ., கூட்டணி பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. மதுராந்தகத்தில் நடந்த முதல் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். மதுரை, மண்டேலா நகரில் மார்ச் 1ல் பிரசார கூட்டம் நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன. இதற்கு, 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக, ரிங்ரோடு பகுதியில் மண்டேலா நகரில் மேடை தயாராகி வருகிறது. இதை, பா.ஜ., — அ.தி.மு.க., பிரமுகர்கள் தினமும் வந்து பார்வையிடுகின்றனர். இங்கு தேர்தல் பிரசார கூட்டத்துடன், அருகே இன்னொரு மேடையில் அரசு நிகழ்ச்சியும் நடத்த ஏற்பாடுகள் நடந்தன.

மதுரை, தோப்பூரில் அமைந்து வரும் எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் துவக்கி வைக்க வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது. இது இன்னும் முடிவாகாத நிலையில், தற்போது புதிய நிகழ்ச்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

நகாய், ரயில்வே திட்டங்கள்

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், தமிழகத்தில் இரண்டு திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதில், பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 47 கி.மீ., தொலைவுக்கு நான்கு வழிச்சாலை, 1,853 கோடி ரூபாய் செலவில் அமைய உள்ளது.அதேபோல, மரக்காணம் – புதுச்சேரி இடையே, 46 கி.மீ., தொலைவுக்கு, 2,157 கோடியில் நான்கு வழிச்சாலை அமைய உள்ளது. இத்திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

ராமேஸ்வரம் – கர்நாடகாவின், மங்களூரு, தாம்பரம் – மங்களூரு, கோவை – ஜார்கண்ட் மாநிலம், தன்பாத் இடையே அம்ரித் பாரத் ரயில்கள் பிரதமரால் துவக்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல, அம்ரித் பாரத் திட்டத்தில், ஸ்ரீவில்லிபுத்துார், சோழவந்தான், மணப்பாறை, காரைக்குடி உட்பட 8 ஸ்டேஷன்கள் திறக்கப்பட உள்ளன. சென்னை பீச் – எழும்பூர் இடையே, 4.3 கி.மீ., தொலைவுக்கு, நான்காவது ரயில் பாதை அமைக்கும் திட்டமும் துவக்கி வைக்கப்பட உள்ளது.

இடம் மாறுகிறது மேடை

இவை அரசு நிகழ்ச்சி என்பதால், அதனை தனியாக நடத்த உள்ளனர். கட்சி, அரசு நிகழ்ச்சிகளை ஒரே இடத்தில் இருபிரிவாக நடத்தும் வகையில் மேடை அமைக்கப்பட்டு வந்தது. இதற்கு பாதுகாப்பு ஒப்புதல் கிடைக்காததால், அரசு நிகழ்ச்சியை 3,000 பேர் பங்கேற்கும் வகையில் விமான நிலைய வளாகத்தில் தனியாக நடத்த உள்ளனர்.

கட்சி நிகழ்ச்சி முடிந்ததும், திருப்பரங்குன்றம் கோவிலுக்கு செல்லும் பிரதமர், தொடர்ந்து அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். நிகழ்ச்சி நடக்கும் நேரம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதற்காக மண்டேலா நகரில் அமைத்த அரசு நிகழ்வுக்கான மேடையை பிரித்து, விமான நிலைய பகுதிக்கு எடுத்துச் சென்றனர்.

Source link