மதுரை: மதுரை தமுக்கம் முதல் நெல்பேட்டை அண்ணாதுரை சிலை வரை, வைகை ஆற்றின் குறுக்கே ரூ.213.80 கோடியில் கட்டப்பட்டுள்ள 1.3 கி.மீ., நீள பாலத்திற்கு ‘நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மேம்பாலம்’ என பெயர் சூட்டி, சில நாட்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இப்பாலத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயரிடுவதே பொருத்தமாக இருக்கும்.
போக்குவரத்து நெரிசலுக்கு சிறு தீர்வாக, மதுரையின் அடையாளங்களில் ஒன்றான கோரிப்பாளையம் தேவர் சிலை உள்ள பகுதி வழியாக இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தை செல்லுார் பகுதியில் இருந்து, தேவர் சிலை பகுதியில் இணைக்கும் பாலத்திற்கான பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. இதுவும் இணைக்கப்பட்ட பிறகே மேம்பாலத்தின் முழுமையான பலன் பொதுமக்களுக்கு கிடைக்கும்.
தேர்தல் அறிவிப்பை கருத்தில் கொண்டு, பணிகள் முழுமையடையாமல் அவசரம் அவசரமாக திறக்கப்பட்டு, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பாலம் என பெயரிடப்பட்டுவிட்டது. புகழ்பெற்ற சுதந்திர போராட்ட தேசிய தலைவரான நேதாஜியின் பெயர் வைத்து கவுரவம் செய்திருப்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் பெருமை மிக்க தேவர் சிலை இருக்கும் சந்திப்பு வழி செல்லும் பாலத்திற்கு ‘முத்துராமலிங்கத்தேவர் மேம்பாலம்’ என்று பெயர் சூட்டியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.
முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியின் போது, மதுரை வழி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் செல்லும் அனைவரும் கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்காமல் செல்வதில்லை. இந்த தேவர் சிலை முக்கிய அடையாளம். மிகப்பெரிய தலைவரான நேதாஜியின் பெயரை எங்கு வேண்டுமானாலும் சூட்டலாம்; அதேவேளையில் தேசியம், தெய்வீகம் ஆகியவற்றை இரு கண்களாக கொண்டிருந்த முத்துராமலிங்கத்தேவரின் பெயரை தென்மாவட்டங்களின் மையமான மதுரையில் உள்ள பாலத்திற்கு சூட்டுவதே நியாயமாக இருக்கும்.
கடந்த மாதம் மதுரையில் முதல்வர் திறந்த சிவகங்கை செல்லும் வழியில் உள்ள கோமதிபுரம் பாலத்திற்கு ‘வீரமங்கை வேலு நாச்சியார்’ பெயர் சூட்டப்பட்டது. அதனை கருத்தில் கொண்டு, ஒரு பிரிவினருக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டாம் எனக்கருதி இந்த பாலத்திற்கு தேவர் பெயர் சூட்டப்படாமல் இருந்திருக்கலாம்’ என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஆனால் முத்துராமலிங்கத்தேவரை ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் தலைவராக மட்டுமே பார்ப்பதே தவறு. அவர் தேசப்பற்றும், தெய்வீகப்பற்றும் நிறைந்த தேசியத் தலைவர் என்பதே சரியானது. ஏற்கனவே மதுரை விமானநிலையத்திற்கு அவர் பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை கிடப்பில் உள்ளது.
தேவர் பெயர் தான் சூட்டப்படும் என பொதுமக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், நேதாஜியின் பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் இல்லாத போதும் முதல்வர் என்ன காரணத்திற்காக இப்படி அறிவித்தார் எனத் தெரியவில்லை.
அதிகாரபூர்வமாக எந்த பெயர் சூட்டினாலும் மேம்பால பகுதியில் தேவர் சிலை நடுநாயகமாக இருப்பதால், பொதுமக்கள் ‘தேவர் பாலம்’ என்றே பேச்சுவழக்கில் குறிப்பிட வாய்ப்பு உள்ளது.
எனவே இணைப்பு பாலம் பணிகள் நிறைவடைந்து, முழுமையாக பாலம் செயல்படும் போது ‘முத்துராமலிங்கத்தேவர் மேம்பாலம்’ என பெயர் சூட்ட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை.
