மதுரையில் 7 பேர் கொல்லப்பட்ட வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு

கரூர்: தேவர் குருபூஜைக்கு சென்று திரும்பிய போது, மதுரை அருகே பெட்ரோல் குண்டு வீசி, 7 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேரையும் குற்றவாளிகள் என, கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில், 2012ல், முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா நடந்தது. அதில், மதுரை மாவட்டம், புளியங்குளத்தை சேர்ந்த, 20 பேர் பங்கேற்று விட்டு, ‘டாடா சும ோ ‘ காரில், சொந்த ஊர் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, மதுரை ரிங் ரோடு வழியாக கார் சென்றபோது, மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர். அதில், வேனில் பயணம் செய்த புளியங்குளத்தை சேர்ந்த வெற்றிவேல், தேசிங்குராஜா, ஜெயபாண்டியன், சந்திர பாண்டியன், ரஞ்சித்குமார், விஷ்ணு பிரியன், சிவராமன் ஆகிய ஏழு பேர் உயிரிழந்தனர்; 13 பேர் படுகாயமடைந்தனர்.

இதுதொடர்பாக, வழக்கு பதிவு செய்த அவனியாபுரம் போலீசார், மதுரை, தேவகனி தெருவைச் சேர்ந்த ராமர் பாண்டி, மணிகண்டன், கார்த்திக், முத்து விஜி, சந்திரசேகர், சோனையா, நாகராஜ், முத்து கருப்பன், மோகன், விக்னேஷ், சந்தோஷ் ஆகிய, 11 பேரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு, மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது.

இந்நிலையில், குற்றவாளிகள் தரப்பில், வழக்கு விசாரணையை, பாதுகாப்பு கருதி வேறு மாவட்டத்துக்கு மாற்றக்கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் வழக்கு விசாரணை, 2021ல், கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில், முத்து விஜி, ராமர் பாண்டி ஆகிய இரண்டு பேரும் கொலை செய்யப்பட்டனர். மீதமுள்ள ஒன்பது பேர் மீதான வழக்கு விசாரணை, கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கில், 48 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேரையும், குற்றவாளிகள் என தீர்ப்பளித்து, தண்டனை தொடர்பான விபரங்கள் நாளை அறிவிக்கப்படும் என, நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.

இதையடுத்து, ஒன்பது பேரும் திருச்சி மத்திய சிறைக்கு, போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர்.

Source link