மதுரை: 'அரசு ஊழியர்கள், தங்களுக்கு வசதியாக உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்திலேயே பணியாற்ற வேண்டும் என்ற நிலையான

மதுரை: ‘அரசு ஊழியர்கள், தங்களுக்கு வசதியாக உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்திலேயே பணியாற்ற வேண்டும் என்ற நிலையான உரிமையை கோர முடியாது. தோட்டக்கலை அலுவலர்கள் இடமாறுதலுக்கு எதிரான வழக்கு, தள்ளுபடி செய்யப்படுகிறது’ என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

தென்மாவட்டங்களில் உதவி தோட்டக்கலை அலுவலர்களாக பணிபுரியும் சிலர், பிற மாவட்டங்களுக்கு இடமாறுதல் செய்யப்பட்டனர்.

இதை எதிர்த்து, அவர்கள் மனு தாக்கல் செய்தனர். நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு:

உதவி வேளாண் அலுவலர்கள் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்களின் கள ஆய்வு பணியை ஒழுங்குபடுத்தும் வகையில், கொள்கை முடிவை மாநில அரசு எடுத்துள்ளது.

இதற்கேற்ப, சில அலுவலர்கள், பிற மாவட்டங்களுக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

அரசு ஊழியர்களாகிய மனுதாரர்கள், அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதற்காக கள ஆய்வு மேற்கொள்வதில், தங்கள் பொறுப்பை உணர்ந்து கொள்ள வேண்டும். தங்களுக்கு வசதியாக உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்திலேயே பணியாற்ற வேண்டும் என்ற நிலையான உரிமையை அவர்கள் கோர முடியாது.

இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கம், அலுவலர்களை மறு பணி நியமனம் செய்வதை அவசியமாக்குகிறது. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

இவ்வாறு உத்தரவிட்டார்.

Source link