மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், இன்ஸ்பெக்டர் உட்பட 9 போலீசாரும் குற்றவாளிகள் என, தீர்ப்பு

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், இன்ஸ்பெக்டர் உட்பட 9 போலீசாரும் குற்றவாளிகள் என, தீர்ப்பு வழங்கிய மதுரை மாவட்ட நீதிமன்றம், அவர்களுக்கான தண்டனை விபரங்களை மார்ச் 30ல் அறிவிப்பதாக தெரிவித்துள்ளது.

துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில், கொரோனா ஊரடங்கு நேரத்தில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து மொபைல் போன் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி, ஜெயராஜ், 63, அவரது மகன் பென்னிக்ஸ் 31, ஆகியோரை, 2020 ஜூன் 19ல், போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர்.

கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட இருவரும், ஜூன் 22ல் பென்னிக்ஸ், 23ல் ஜெயராஜ் அடுத்தடுத்து உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தனர்.

சம்பவம் தொடர்பாக, சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், சிறப்பு எஸ்.ஐ., பால்துரை, ஏட்டு க்கள் முருகன், சாமத்துரை, போலீஸ்காரர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில்முத்து ஆகியோரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.

பின், இந்த வழக்கு சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிறப்பு எஸ்.ஐ.,பால்துரை கொரோனா பாதிப்பால், 2020 ஆக., 10ல் இறந்தார்.

ஸ்ரீதர் உள்ளிட்ட 9 பேரும் மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம், உயர் நீதிமன்ற கிளையில் பலமுறை தாக்கல் செய்த ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது.

இந்த வழக்கில், 3 மாதங்களில் விசாரணையை முடிக்க, 2025 நவ., 26ல் உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட போலீசார், சி.பி.ஐ., தரப்பில் மார்ச் 2ல் வாதம் முடிந்தது. நீதிபதி முத்துக்குமரன், ‘மார்ச் 23ல் இறுதி உத்தரவு பிறப் பிக்கப்படும்” என்றார்.

நேற்று மாலை, 4:00 மணிக்கு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது பொய் வழக்கு பதிந்துள்ளனர். சட்டவிரோதமாக காவலில் வைத்து மரணம் விளைவிக்கும் வகையில் இருவரையும் இடைவெளிவிட்டு பலமுறை இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 9 பேரும் தாக்கியுள்ளனர். இதனால் இருவரும் இறந்துள்ளனர்.

போலி ஆவணங்களை உருவாக்கியுள்ளனர். மற்றொரு வழக்கில் கைதான ராஜாசிங் என்பவரையும் இதுபோல் தாக்கியுள்ளனர். இதுபோன்ற துன்புறுத்தல் விசாரணை நடைமுறைகள் பிரிட்டீஷ் ஆட்சியில் பின்பற்றப்பட்டன. அது தற்போதும் தொடர்வது துரதிர்ஷ்டவசமானது.

ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை செய்யப்பட்டதில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 போலீசாரும் குற்றவாளிகள் என, இந்நீதிமன்றம் முடிவு செய்கிறது. அவர்களுக்கு மார்ச் 30ல் தண்டனை விபரம் அறிவிக்கப்படும்.

அவர்களின் சொத்து மதிப்பு, சம்பளம் விபரங்களை துாத்துக்குடி எஸ்.பி., சமர்ப்பிக்க வேண்டும். அவர்களின் நன்னடத்தை சான்றுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட அலுவலர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

இவர்களுக்கு எத்தகைய தண்டனை விதிப்பது என்பது குறித்து மத்திய – மாநில அரசுகள் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவர்களின் உடல்நலம், மனநலம் குறித்த மருத்துவ சான்றுகளை சி.பி.ஐ., தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார். பின், 9 பேரும் மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஜெயராஜ் மகள் பெர்சி கூறுகையில், ”தந்தை, தம்பி கொலை வழக்கில் நீதி கிடைத்துள்ளது. ஒன்பது பேருக்கும் அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்,” என்றார்.

பழனிசாமி பகிரங்க மன்னிப்பு கேட்கணும்


சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், 9 போலீசாரும் குற்றவாளிகள் என, 6 ஆண்டுகளுக்கு பின், நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், சம்பவம் நடந்த போது, முதல்வராக இருந்த பழனிசாமி, மூச்சுத்திணறல், உடல்நலக்குறைவால் இறந்தனர் என, பொய் சொல்லி போலீஸ் துறையினரை காப்பாற்றினார். குற்றவாளிகளை காப்பாற்ற, அன்று பொய் சொன்ன பழனிசாமியும், ஒரு வகையில் குற்றவாளி தான். பழனிசாமி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
– ரகுபதி, தி.மு.க., அமைச்சர்

Source link