மதுரை: ‘சாத்தான்குளம் வழக்கில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட ஒன்பது போலீசாரை போல, ஒரு சிலர் செய்யும் தவறு, தமிழக காவல் துறைக்கே களங்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. அதற்கு குறைந்தபட்ச தண்டனை அளிப்பது மனித உரிமை மீறல்களை ஊக்குவிக்கும் செயலாகிவிடும்’ என, துாக்கு தண்டனை தீர்ப்பில், மதுரை மாவட்ட நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ், போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட ஒன்பது போலீசாருக்கு துாக்கு தண்டனை விதித்து, மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் உத்தரவிட்டார்.
அரிதான வழக்கு
இதன் தீர்ப்பு நகல் தற்போது வெளியாகியுள்ளது. இதில், நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ஒரு குற்றம் உணர்ச்சிவசத்தால் செய்யப்பட்டால், அதை மிதமான காரணமாக கருத முடியும். இவ்வழக்கை பொறுத்தவரை, ஜெயராஜ், போலீசாரை கோபத்தில் பேசினார் என்பதற்காக, அவரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று பழிவாங்கும் நோக்கில் தாக்கி துன்புறுத்தியுள்ளனர்.
இதை கேள்வி எழுப்ப சென்ற பென்னிக்ஸையும் தாக்கியுள்ளனர். ஜெயராஜ், பென்னிக்ஸை சாத்தான்குளம் போலீசில் தடுத்து வைத்தது சட்டவிரோதம். போலீசார், தந்தை முன் மகனையும், மகன் முன் தந்தையையும், ஆடைகளை களைந்து தாக்கி, சித்ரவதை செய்துள்ளனர். இது, மனித மாண்புக்கு முற்றிலும் முரணானது.
சம்பவத்தின் போது, ஜெயராஜ், பென்னிக்ஸ் நிராயுதபாணிகளாக இருந்தனர். அவர்கள் வெளியே தப்பித்து ஓடிவிடாதபடி, கதவை பூட்டி, கையில் கயிற்றை கட்டி, தாக்கி கொடுமைப்படுத்தியுள்ளனர். குற்றத்தின் தன்மையை கருத்தில் கொண்டு பார்க்கையில், இவ்வழக்கு அரிதிலும், அரிதான வழக்கு என்ற விதியின் கீழ் வருகிறது.
சட்டம் வழங்கிய அதிகாரத்தை, பழிவாங்கும் நோக்கில் போலீசார் தவறான பயன்படுத்தியுள்ளனர். கைதிகளை அடிக்க, போலீசாருக்கு உரிமை இல்லை. தந்தை, மகனை இரவு முழுதும் அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர். இது, அருவருக்கத்தக்க குற்றம்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர், ஒரே நேரத்தில் இறந்துள்ளனர். ஒரு குடும்பத்தின் ஆணிவேர் அகற்றப்பட்டுள்ளது. இருவரும் சாதாரண குடிமக்கள். சமூகத்தில் அந்தஸ்து பெற்றவர்கள். இருவருக்கும் குற்றப் பின்னணி இல்லை.
குரூர மனநிலை
பிரேத பரிசோதனை வீடியோ மற்றும் போட்டோக்களை பார்க்கும் போது, மிக கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டது தெரிய வருகிறது. இதை பார்ப்பவர்களின் மனம் வெம்பிவிடுகிறது.
குற்றவாளிகளான, 9 போலீஸ்காரர்களும் படித்தவர்கள். வேலியே பயிரை மேய்ந்த கதையாக குற்றம் செய்துள்ளனர். ஜெயராஜ் மனைவி செல்வராணியின் துக்கத்தை எவ்வகையிலும் நீக்க முடியாது.
தமிழக காவல்துறை திறமையான, நேர்மையான கடமைமிக்க அதிகாரிகளை கொண்டது. ‘ஸ்காட்லாந்து யார்டு’க்கு இணையாக புகழ்பெற்றது. இவ்வழக்கின் எதிரிகளை போல், ஒரு சிலர் செய்யும் தவறு, தமிழக காவல்துறைக்கே களங்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
இத்தகைய குற்றங்களை புரிபவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கினால், மற்ற போலீஸ்காரர்களிடையே, ‘நீதிமன்றத்தால் நம்மை என்ன செய்துவிட முடியும். ஆயுள் தண்டனை தானே வழங்குவார்கள்.
இறந்தவர்கள் மீதே வழக்கு பதிவு செய்து தப்பித்து விடலாம் அல்லது சாட்சியங்களை அழித்து தப்பித்துவிடலாம். 14 ஆண்டுகளில் வெளியில் வந்துவிடலாம்’ என்ற தவறான எண்ண ஓட்டத்தை உருவாக்கி விடும்.
இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டதால், அதை நிறைவேற்ற வேண்டும் என்ற அச்சத்தில், தாங்கள் இக்குற்றத்தை செய்துவிட்டோம். மன்னித்து குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டுமென, மற்ற எதிரிகள் வாதிடக்கூடும்.
உயரதிகாரியாகவே இருந்தால் கூட, கடமை மிக்கவர்களாக மற்றவர்கள் இருந்திருந்தால், ஸ்ரீதரை பற்றி உயரதிகாரிகளிடம் முறையிட்டு, ஜெயராஜ், பென்னிக்ஸை காப்பாற்ற நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதை செய்யாமல், ஈவு இரக்கம் இல்லாமல் போலீசார் நடந்துள்ளனர்.
பிரேத பரிசோதனை குறித்த வீடியோ பதிவு, போட்டோக்களை பார்க்கையில், குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் ஏற்படாது. உச்ச நீதிமன்றம் பலமுறை கடுமையாக சாடியும், போலீசாரின் இதுபோன்ற நடவடிக்கையை பண்பாடு, நாகரிகத்தால் முன்னேறிய சமூகத்தில் கவலைக்குரியதாக பார்க்கப்படுகிறது.
கருணை இல்லை
ஒரு புழு பூச்சியை போல், இருவருக்கு மரணத்தை ஏற்படுத்தியது நீதியின் மனசாட்சி, சமூகத்தின் மனசாட்சியை உலுக்குவதாக உள்ளது. ஆயுள் தண்டனை போதும் என்று கூறுவதற்கு வழியே இல்லாத வகையில் இவ்வழக்கை, ‘அரிதிலும் அரிதான’ என்ற பிரிவுக்குள் கொண்டு வர நீதிமன்றம் தீர்மானிக்கிறது.
போலீஸ் ஸ்டேஷனில் மரணங்கள் கொடூரமானது. குற்றத்திற்கு மரண தண்டனை விதிப்பதில் எந்த கருணையும் காட்டப்படக்கூடாது என, உச்ச நீதிமன்றம் 2011ல் உத்தரவிட்டது. இனியும் இத்தகைய குற்றங்களை செய்ய நினைப்பவர்களுக்கு துாக்கு தண்டனை ஒன்று தான் பரிசாக கிடைக்கும் என்பதை அவர்கள் உணர்ந்தால் தான், ஓரளவாவது கட்டுப்படுத்த முடியும்.
இவ்வழக்கை பொறுத்தவரை, யார் அதிகமாக காயப்படுத்தினர் என்றெல்லாம் வேறுபடுத்தி பார்க்க முடியாது. குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது போலீஸ்காரர்களும் கூட்டாக குற்றம் செய்துள்ளனர். எனவே, ஸ்ரீதர் உள்ளிட்ட ஒன்பது போலீஸ்காரர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்.
