மதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் போலீஸ் விசாரணையில் ஆகாஷ் டெலிசன் மரணமடைந்த

மதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் போலீஸ் விசாரணையில் ஆகாஷ் டெலிசன் மரணமடைந்த விவகாரத்தில்,’கொலைக்குரிய மற்றும் எஸ்.சி.,- எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவுகளில் சி.பி.சி.ஐ.டி.,வழக்கு பதிவு செய்துள்ளது,’ என அரசு தரப்பு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்தது. போராட்டக்காரர்கள் மானாமதுரை நான்குவழிச்சாலை சந்திப்பிலிருந்து காலி செய்து கொள்ள வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.


மானாமதுரை ராஜேஷ் கண்ணன் தாக்கல் செய்த மனு:

எனது மகன் ஆகாஷ் டெலிசன் 26. அவரது நண்பர் குணா. இவர்கள் உட்பட சிலர் மார்ச் 6 ல் மது அருந்தினர். தகராறு ஏற்பட்டது. தாக்குதலில் அழகர், ஜெயக்குமார் காயமடைந்தனர். சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆகாஷின் வலது காலில் கட்டு போடப்பட்டிருந்தது. அங்கிருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

போலீசார் தாக்கியதில் வலது காலில் காயம், எலும்பு முறிவு ஏற்பட்டது என்றார். ஆகாஷ் மார்ச் 8ல் இறந்தார். எங்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.


ஏற்கனவே விசாரணையின்போது அரசு தரப்பு:

ஆகாஷ் டெலிசன் மீது சில வழக்குகள் உள்ளன. ரவுடிகள் சரித்திர பதிவேட்டில் அவரது பெயர் உள்ளது. மது அருந்திய தகராறில் அழகர், ஜெயக்குமாரை அரிவாளால் வெட்டியுள்ளார். டூவீலரை சேதப்படுத்தினார். ஆகாஷை போலீசார் கைது செய்ய முயன்றபோது பாலத்திலிருந்து கீழே விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரது மரண வழக்கின் விசாரணை ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி.,போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக சிலர் மானாமதுரையில் மதுரை-ராமேஸ்வரம் நான்குவழிச் சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து பாதித்துள்ளது என தெரிவித்தது.


மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்:

ஆகாஷ் டெலிசன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது மானாமதுரை நீதித்துறை நடுவர் விசாரணை நடத்தினார். அவரிடம் ஆகாஷ் டெலிசன்,’சீருடையில் இல்லாத 10 பேர் என்னை பிடித்தனர். எனது காலுக்கு கீழே 2 கற்களை வைத்தனர். ஈர சாக்கை காலுக்கு மேல் போட்டனர். இரும்பு கம்பியால் வலது காலில் தாக்கினர். கால் எலும்பு முறிந்து ரத்தம் வடிந்தது. நான் மேலப்பசலை பாலத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டதாக கூறுமாறு போலீசார் என்னை மிரட்டினர். எனது கண் கட்டப்பட்டிருந்ததால் யார் தாக்கினர் என தெரியவில்லை,’ என வாக்குமூலம் அளித்துள்ளார். இவ்வாறு விவாதம் நடந்தது.

நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

ஆகாஷ் டெலிசன் மரணம் தொடர்பாக பட்டியல் ஜாதிகள் மற்றும் பழங்குடியினர் (எஸ்.சி.,-எஸ்.டி.,) வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவையும் சேர்த்து வழக்கு பதிய வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரிடம் பேச்சுவார்த்தை நடத்த அமைதிக்குழுவில் வழக்கறிஞர்கள் சாமிதுரை, மயில்வாகன ராஜேந்திரன், ராமலிங்கம் நியமிக்கப்படுகின்றனர். நான்குவழிச்சாலையில் போராட்டத்தை கைவிட்டு, மானாமதுரை பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு மாற்றி, அமைதியான முறையில் நடத்த அக்குழு சமாதானப்படுத்த வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.

நேற்று நீதிபதி எல்.விக்டோரியா கவுரி விசாரித்தார்.

மனுதாரர்:

மகனின் மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என கண்ணீர்மல்க தெரிவித்தார். நீதிபதி: கண்களை கட்டி தாக்கினர். யார், யார் தாக்கினர் என ஆகாஷ் டெலிசன் கூறவில்லை. அரசு சரியான நடவடிக்கை எடுத்துள்ளது. போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும். பிரேத பரிசோதனை செய்த உடலை எடுத்துச் செல்ல வேண்டும்.

அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல்கான்: நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் போராட்டக்காரரர்கள் தொடர்கின்றனர். இவர்களால் போக்குவரத்து பாதித்துள்ளதால், அவர்களை அப்புறப்படுத்துமாறு வேறு சிலர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

அமைதி குழு அறிக்கை சமர்ப்பித்தது.

அதில்,’போராட்டக்காரர்கள் நீதிமன்ற உத்தரவிற்கு ஒத்துழைக்கத் தயார். கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தால் மானாமதுரை பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அமைதியாக போராட்டத்தை தொடர தயார் என்றனர்,’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல்கான், ‘போராட்டக்காரர்களின் கோரிக்கையை மாநில அரசு பரிசீலித்தது. குற்றச்சாட்டுகளில் மாற்றம் செய்து கொலைக்குரிய பி.என்.எஸ்.,பிரிவு103 மற்றும் எஸ்.சி.,-எஸ்.டி.,வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது,’ என்றார்.

ஏற்கனவே இந்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அரசு நிறைவேற்றியுள்ளது.

நான்குவழிச்சாலை சந்திப்பில் போராட்டத்தால், மக்களுக்கு இடையூறு ஏற்பட்டதுடன் போக்குவரத்து தடைபட்டது. அமைதியாக போராட்டம் நடத்த உரிமை உள்ளது. அந்த உரிமை முழுமையானதல்ல. பிறரது உரிமைகளை கருத்தில் கொண்டு விதிக்கப்படும் நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது.

ஒரு போராட்டத்தின் நோக்கம் நியாயமானதாக இருந்தாலும், அது மக்களின் சுதந்திரமான செயல்பாட்டை முடக்கும் மற்றும் சம்பந்தமில்லாதவர்களுக்கு சிரமம் ஏற்படுத்தும் வகையில் நடைபெற அனுமதிக்க முடியாது.

போராட்டக்காரர்கள் நான்குவழிச்சாலை சந்திப்பிலிருந்து வெளியேற வேண்டும். அவர்கள் விரும்பினால் மானாமதுரை பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அமைதியான முறையில் போராட்டத்தை தொடரலாம். இதை நிறைவேற்றாதபட்சத்தில் நான்குவழிச்சாலை சந்திப்பிலிருந்து போராட்டக்காரர்களை அகற்ற, போக்குவரத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவர சட்டப்படி எஸ்.பி.,நடவடிக்கை மேற்கொள்ளலாம். அமைதிக் குழு உறுப்பினர்களான சாமிதுரை, மயில்வாகன ராஜேந்திரன், ராமலிங்கத்திற்கு இந்நீதிமன்றம் பாராட்டுக்களை தெரிவிக்கிறது. விசாரணை இன்று (மார்ச் 13) ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.

Source link