மதுரை: திருச்சி மாவட்டம், சமயபுரம் கோவிலில், பக்தர்கள் விட்டுச் செல்லும் மக்கும் தன்மையுள்ள கழிவுகளில் இருந்து, மின்சார உற்பத்திக்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய, வழக்கறிஞர் கமிஷனரை நியமித்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
சேலம் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு: திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நிர்வாக குறைபாடுகள் உள்ளன. சட்டவிரோதமாக பணம் வசூலிக்கப்படுகிறது. குளத்தை முறையாக பராமரிக்க வேண்டும்.
தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் பிற பொருட்களை பக்தர்கள் விட்டுச் செல்கின்றனர். கோவில் வளாகம், குளத்தை ஆய்வு செய்ய வழக்கறிஞர் கமிஷனரை நியமிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிட்டார்.
நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி பிறப்பித்த உத்தரவு: வழக்கறிஞர் அகிலாண்டேஸ்வரி கமிஷனராக நியமிக்கப்படுகிறார். அவர், கோவிலில் பக்தர்களுக்கு சுகாதார வசதிகள் போதுமானதாக உள்ளதா, கழிவுகள் அறிவியல் பூர்வமான முறையில் அகற்றப் படுகின்றனவா என ஆய்வு செய்ய வேண்டும்.
குளத்தின் மண், நீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வக பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும்.
மக்கும் தன்மையுள்ள கழிவுகளை அகற்றுவதற்கான வழிமுறைகளை, குறிப்பாக ‘பயோகேஸ்’ அல்லது சூரிய ஒளியில் மின்சாரம் தயாரித்தல் அல்லது உரம் தயாரிப்பு வசதிகளை அமைப்பது உள்ளிட்ட பரிந்துரைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.
மக்கள் உணவு உட்கொண்ட பின் விட்டுச் செல்லும் இலைகளை நீடித்த மின்சக்தி உற்பத்திக்கு பயன்படுத்த முடியும் என்பதை கருத்தில் கொண்டு, பதிலளிக்கும் வகையில் தமிழக எரிசக்தி மேம்பாட்டு நிறுவன தலைவர், மேலாண்மை இயக்குனரை இந்நீதிமன்றம் தானாக முன்வந்து எதிர்மனுதாரராக இணைத்துக் கொள்கிறது.
அறநிலையத்துறை செயலர், கமிஷனர், சமயபுரம் கண்ணனுார் பேரூராட்சி செயல் அலுவலர், கோவில் செயல் அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்பி, ஜூன் 4க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.
