மதுரை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஏப்ரல் 9ம் தேதிக்கு ஒத்திவைத்து ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம், எழுமலை ராமரவிக்குமார் உள்ளிட்ட சிலர் தாக்கல் செய்த மனு அடிப்படையில், 2025 டிச., 1ல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘வழக்கமான இடங்களைத் தவிர, திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்’ என, உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை நிறைவேற்றாததால் தாக்கலான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ‘தீபத்துாணில் ராமரவிக்குமார் தரப்பில் தீபம் ஏற்ற போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும்’ என, டிச., 4ல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். இதை எதிர்த்து, கலெக்டர் பிரவீன்குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன், இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தனர். இது ஏற்கனவே நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே போலீசார் பாதுகாப்புடன் ராம ரவிக்குமார் தரப்பில் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என அவமதிப்பு வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு இடைக்காலத் தடை விதித்தது.
இந்த, அவமதிப்பு வழக்கு மீண்டும் நீதிபதி சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. தீபத்துாண் அமைந்துள்ள மலை உச்சியில் நீதிமன்றம் நியமிக்கும் 5 நபர்களை வழிபட அனுமதிக்க வேண்டும். இதில் உரிய முடிவெடுத்து தெரிவிக்காத பட்சத்தில் போலீஸ் கமிஷனர், போலீஸ் துணை கமிஷனர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என ஏற்கனவே உத்தரவிட்டிருந்தேன்.
ஏன் இருவரும் ஆஜராகவில்லை. அவர்களுக்கு எதிராக வாரன்ட் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என நீதிபதி எச்சரித்தார். அவர்கள் ஆஜராக அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. பிறகு, ”ஒட்டுமொத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலும், இரு நீதிபதிகள் அமர்வு தடை விதிக்கவில்லை. அவமதிப்பு வழக்கு ஏப்ரல் 9க்கு ஒத்திவைக்கப்படுகிறது” என்றார்.
